புது டெல்லி:
இந்தியாவை பொறுத்த வரை ரூபாய் நோட்டுகளில் எத்தனை மாற்றங்கள் கொண்டு வந்தாலும் அதை கள்ள நோட்டுகளாக அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பலும் அதிகரித்து தான் வருகிறது.
இப்படி சமீபகாலமாக 500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளும் வெளி வந்து அதிகாரிகளை அதிர வைத்து வருகிறது. கடந்த நிதி ஆண்டில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 625 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல இந்த நிதி ஆண்டில் இதுவரை 2 லட்சத்து 30 ஆயிரத்து 971 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டது தெரியவந்தது. இது சென்ற ஆண்டை விட அதிகமாகும்.
இதையடுத்து இதை ஒழிக்க 500 ரூபாய் நோட்டுகளில் மாற்றம் கொண்டு வர ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தற்போது அச்சடிக்கபடுவதில்லை. இதனால் கள்ள நோட்டு தயாரிக்காமல் இருக்கும் வகையில் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்காக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்தின் சிறந்த பாதுகாப்புடன் கூடிய காகிதங்கள் மற்றும் மை பயன்படுத்தபட உள்ளது. இதனால் விரைவில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.