தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத் தடை விவகாரத்தின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகளை மேற்கொண்டு வந்த அரசு, இப்போதாவது புதிய சட்டம் இயற்றுவது தான் இச்சிக்கலுக்குத் தீர்வு என்ற நிலைக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் லட்சக்கணக்கான குடும்பங்கள் தெருவுக்கு வர காரணமாக இருந்தது பரிசுச் சீட்டுகள் தான். இப்போது அந்த தீமையையும், சீரழிவையும் ஆன்லைன் சூதாட்டங்கள் செய்து கொண்டிருக்கின்றன. பரிசுச்சீட்டு காலத்தில் ஒவ்வொரு குடும்பமும் சில ஆயிரக்கணக்கில் கடன் சுமைக்கு ஆளாயின என்றால், இப்போது ஒவ்வொரு குடும்பமும் பல லட்சங்களில் தொடங்கி, சில கோடிகள் வரை இழந்து தவிக்கின்றன. பரிசுச்சீட்டுகளில் பணத்தை இழந்தவர்கள் கடன்காரர்களாக மாறுவார்கள்; தற்கொலைகள் அரிதிலும் அரிதாகத் தான் நிகழும். ஆனால், ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்ததால் கடந்த 8 ஆண்டுகளில் 60 க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவை அனைத்தும் கணக்கில் வந்த தற்கொலைகள் தான்… கணக்கில் வராத தற்கொலைகள் ஏராளம்.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி தீர்ப்பளித்ததற்கு பிந்தைய 10 மாதங்களில் மட்டும் 21 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மிகப்பெரிய உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று 2016-ஆம் ஆண்டு முதல் 7 ஆண்டுகளாக மருத்துவர் அய்யா போராடி வருகிறார். அதன் பயனாகத் தான், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படும் என்று 05.11.2020 அன்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதைத் தொடர்ந்து 21.11.2020 அன்று அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, 2021 பிப்ரவரியில் பேரவையில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
முந்தைய அதிமுக அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய சட்டத்தில் சில பிழைகள் இருந்தன என்பது உண்மை தான். அதனால் தான் அந்த சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அத்துடன் ரத்து செய்யப்பட்ட சட்டத்தில் உள்ள பிழைகளை சரி செய்து, திருத்தப்பட்ட சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. புதிய சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று 04.08.2021 அன்று மருத்துவர் அய்யா அறிக்கை வெளியிட்டார். அடுத்த சில மணி நேரங்களில் இது குறித்து அறிக்கை வெளியிட்ட சட்ட அமைச்சர் ரகுபதி,‘‘ ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான சட்டத்தை எந்த தாமதமும் இன்றி நிறைவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருக்கிறார்’’ என்று கூறியிருந்தார். தமிழக அரசு நினைத்திருந்தால் அடுத்த 10 நாட்களில், அதாவது ஆகஸ்ட் 13-ஆம் நாள் தொடங்கிய பேரவைக் கூட்டத்திலேயே ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை இயற்றியிருக்கலாம்.
ஆனால், செப்டம்பர் 13-ஆம் தேதி வரை 22 நாட்கள் பேரவைக் கூட்டம் நடைபெற்றும் கூட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்படவில்லை. அதுபற்றி அமைச்சர் ரகுபதியிடம் கேட்ட போது, ‘‘ ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து புதிய சட்டம் இயற்றப்போவதில்லை… உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போகிறோம்’’ என்று கூறினார். கடந்த மார்ச் 22-ஆம் தேதி சட்டப்பேரவையில் இது குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்து பேசும் போதும் அமைச்சர் ரகுபதி இதையே கூறினார். முதலமைச்சரும் பல்வேறு தருணங்களில் இதையே கூறியிருக்கிறார். ஆனால், மேல்முறையீடு செய்வதாகக் கூறி 8 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு இன்னும் விசாரணைக்குக் கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை…. மாறாக, தற்கொலைகள் தான் தொடர்கின்றன.
சென்னை உயர்நீதிமன்றத்தால் பிழையான சட்டம் என்று கூறப்பட்ட சட்டத்தை உச்சநீதிமன்றத்தில் பாதுகாக்கப் போவதாக கூறி வந்த தமிழக அரசு, இப்போது புதிய ஆன்லைன் தடைச் சட்டத்தை இயற்றப் போவதாக கூறியிருப்பது வரவேற்கத்தக்க மாற்றம் ஆகும். ஆனால், இது தடுமாற்றமாகி விடக் கூடாது. ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படும் வரை எந்த நாளில் எத்தனை பேர் தற்கொலை செய்து கொள்வார்கள்; எத்தனைக் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் என்பதை எவராலும் கணிக்க முடியாது.
எனவே, ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருந்தால், புதிய தடை சட்டத்தை இயற்றுவதற்காக அக்டோபர் – நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்திற்காக காத்திருக்கத் தேவையில்லை. அதற்கு, இன்னும் 5, 6 மாதங்கள் உள்ள நிலையில், அதற்குள் ஆன்லைன் சூதாட்டம் சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது போன்ற புதிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை ஒரு வாரத்திற்குள் வரைவு செய்ய முடியும் எனும் நிலையில், அதை உடனடியாக தயாரித்து அடுத்த இரு வாரங்களில் அவசர சட்டமாக பிறப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்:” என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.