இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் பேசிய பிரதமர் மோடி, நமது நாட்டின் எல்லைகள் 2014 ஆம் ஆண்டுக்கு முன் இருந்ததை விட தற்போது பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளார்..
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை பெரிய அளவில் நடத்த அக்கட்சி திட்டமிட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக இமாச்சல பிரதேச மாநிலம் சில்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் மக்கள் மலர்களை தூவி உற்சாகமாக வரவேற்பளித்தனர்.
நிகழ்ச்சியில், பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 11 வது தவணையாக மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை பிரதமர் மோடி விடுவித்தார். பின்னர், பல்வேறு நலத்திட்ட பயனாளிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடிய அவர், கருத்துக்களையும் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, கடந்த 8 ஆண்டுகளில் தன்னை ஒரு முறைகூட பிரதமராக நினைத்ததில்லை என்றும் கோப்புகளில் கையெழுத்திடும்போது மட்டும் தான் பிரதமர் என்ற பொறுப்பு தனக்கு உள்ளதாகவும் குறிப்பிட்டார். 130 கோடி மக்களின் முதன்மை சேவகனாக மட்டுமே தான் இருப்பதாக கூறிய பிரதமர், தனது வாழ்வை, நாட்டு மக்களுக்காகவே அர்ப்பணித்துள்ளதாக கூறினார்.
நமது நாட்டின் எல்லைகள் 2014ஆம் ஆண்டிற்கு முன்பு இருந்ததை விட, தற்போது மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு திட்டங்களில் இருந்த பல கோடி போலி பயனாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.