சிம்லா: ஒன்றியத்தில் பாஜ தலைமையிலான ஆட்சி 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி, சிம்லாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘பாஜவின் 8 ஆண்டு கால ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது,’ என்றார்.ஒன்றியத்தில் பிரதமர் மோடி தலைமையில் 8 ஆண்டு கால பாஜ ஆட்சி நிறைவு செய்யப்பட்டுள்ளதை கொண்டாடும் வகையில், இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா பாஜ கட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து நேற்று சிம்லா வந்த பிரதமர் மோடி,பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 11வது தவணையாக ரூ.21,000 கோடியை விடுவித்தார். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகையாக ரூ.6,000 நிதி தலா ரூ.2,000 வீதம் 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதும் ஒன்றிய அரசின் திட்டப் பயனாளிகளுடன் காணொலி வாயிலாக மோடி பேசினார்.இதைத் தொடர்ந்து, சிம்லாவின் ரிட்ஜ் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: கடந்த 8 ஆண்டுகளில் நாடு மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பு இருந்ததை விட இப்போது நமது நாட்டின் எல்லைகள் மிகவும் பாதுகாப்பாக உள்ளன. நாட்டில் வறுமை குறைந்துள்ளதை, சர்வதேச அமைப்புகள் பலவும் ஒப்புக் கொள்கின்றன. பாஜ ஆட்சி அமைந்த பிறகு, பல்வேறு திட்டங்களின் பயனாளிகள் பட்டியலில் இருந்து 9 கோடி போலி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. திட்டப் பலன்களை பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்குவதன் மூலம் ஊழலின் நோக்கத்தை பாஜ அரசு ஒழித்துள்ளது. நேரடி பலன் பரிமாற்றம் மூலம் இதுவரை பல்வேறு திட்டப் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ரூ,22 லட்சம் கோடிக்கு மேல் பணம் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பு பல்வேறு ஊழல் குறித்த செய்திகள் அடிக்கடி வெளிவந்தன. அப்போது ஊழல் என்பது அரசின் இன்றியமையாத அங்கமாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது பாஜ அரசின் வளர்ச்சித் திட்டங்கள் பற்றியும், எந்த வகையிலும் ஊழலை பொறுத்துக் கொள்ளாத நடவடிக்கைகள் பற்றியும் தான் விவாதிக்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து பாஜ அரசு கடுமையாக போராடியது. இதுவரை 200 கோடி தடுப்பூசி மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதுதவிர பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியும் உதவி செய்துள்ளோம். நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரி கட்ட இந்த அரசு திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.* பிரதமர் அல்ல… பிரதான சேவகன்பிரதமர் மோடி மேலும் பேசுகையில், ‘‘நான் என்னை பிரதமராக கருதவில்லை. மாறாக, நான் என்னை மக்களின் பிரதான சேவகனாகவே கருதுகிறேன். 130 கோடி இந்தியர்களின் குடும்பத்தில் நானும் ஒருவன். என் வாழ்க்கையே அவர்களுக்கானது’’ என்றார்.* தாயின் ஓவியத்தை பார்த்து காரை நிறுத்திய மோடிபொதுக்கூட்ட மைதானத்திற்கு பிரதமர் மோடி காரில் வந்த போது, சாலையோரம் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வரவேற்றனர். அப்போது கூட்டத்தில் ஒரு இளம்பெண் அவரது கையில், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் ஓவியத்தை வைத்தபடி நின்றிருந்தார். அதை கவனித்த மோடி உடனடியாக காரை நிறுத்தி, அந்த இளம்பெண்ணிடம் சென்றார். பெரும் மகிழ்ச்சி அடைந்த அந்த இளம்பெண் தான் வரைந்த ஓவியத்தை பரிசாக தந்தார். அதைப் பெற்ற மோடி, அந்த பெண்ணின் பெயர், ஊர், ஓவியம் வரைய எத்தனை நாள் ஆனது என விசாரித்தார். அந்த பெண்ணும் தனது பெயர் அனு என்றும் ஒரே நாளில் ஓவியம் வரைந்ததாகவும் கூறினார். பின்னர் பிரதமர் மோடி அந்த பெண்ணின் தலையில் தட்டிக் கொடுத்து வாழ்த்திவிட்டு காரில் ஏறிச் சென்றார்.