FIR மட்டும் போட்டிருந்தால் பாஸ்போர்ட் வழங்க தடையில்லை – நீதிமன்றம்

முதல் தகவல் அறிக்கை நிலையில் குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நபருக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருச்சியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் மலேசியாவில் தொழில் செய்துவருகிறார். தமது பாஸ்போர்ட் தொலைந்துவிட்ட நிலையில் இந்தியா திரும்புவதற்காக தமக்கு புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி மலேசியாவில் இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்தார். ஆனால் அவர் கடந்த 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் திருச்சியில் இருந்தபோது சில குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாகக்கூறி அவருக்கு பாஸ்போர்ட் வழங்க மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவுக்கு எதிராகவும் தமக்கு பாஸ்போர்ட் வழங்குமாறு உத்தரவிடக்கோரியும் ஷேக் அப்துல்லா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்துள்ள உத்தரவில், குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இருந்தால் பாஸ்போர்ட் வழங்க எந்த தடையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
image
மேலும் வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டிய நிலையில் இருந்தால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றத்தின் உத்தரவு தேவை எனவும், அதுவும் இந்தியாவை விட்டு செல்லவேண்டிய நிலையிருந்தால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றத்தின் அனுமதி வேண்டுமெனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியா வருவதற்காக பாஸ்போர்ட் கோரினால் நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு பாஸ்போர்ட் கோரி மலேசியாவில் உள்ள இந்திய தூதரக்கத்திடம் மீண்டும் விண்ணப்பிக்குமாறு மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி அதனை ஏற்றுக்கொண்டு உடனடியாக அவருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டுமெனவும் இந்திய தூதரகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.