பிரித்தானியாவில் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 11 அதிகரித்துள்ள நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 190 என உயர்ந்துள்ளது.
பிரித்தானியாவில் முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு மூன்று வாரங்களுக்கு மேல் ஆகியுள்ளது.
அன்றிலிருந்து பாதிப்பு எண்ணிக்கை மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டு வந்துள்ளது.
மட்டுமின்றி நேற்றிலிருந்து பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது.
பிரித்தானியாவில் இதுவரை குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 183 ஆக உள்ளது,
ஸ்கொட்லாந்தில் நான்கு பேர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, வடக்கு அயர்லாந்தில் இரண்டு மற்றும் வேல்ஸில் ஒருவருக்கும் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, குரங்கம்மை தொற்றால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் என்பது மிகக் குறைவே என தெரிவித்துள்ளார் UKHSA-வுக்கான மூத்த மருத்துவ ஆலோசகர் Dr Ruth Milton.
இருப்பினும், தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவது நமது அனைவரின் பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், குரங்கம்மை தொற்று தொடர்பில் எச்சரிக்கை தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவருக்கேனும் குரங்கம்மை அறிகுறி தென்பட்டால் தாமதப்படுத்தாமல் 111 இலக்கத்திற்கு தொடர்புகொள்ள வேண்டும் எனவும் அல்லது அவர்களுக்கு அருகாமையில் உள்ள பாலியல் சுகாதார சேவையை நாட வேண்டும் என Dr Ruth Milton கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரித்தானியாவில் முதல் தொற்று மே 7ம் திகதி உறுதி செய்யப்பட்டுள்ளது. 1970களில் இருந்தே காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் குரங்கம்மை தொற்று காணப்பட்டு வருகிறது.
சமீபத்திய வாரங்களில் ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடுகளில் 300 பேர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்று பரவாமல் இருக்க, உடலுறவு கொள்வதை நிறுத்துமாறு, சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
தம்பதிகள் நெருக்கமாக இருப்பதாலும் குரங்கம்மை பரவ வாய்ப்பிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தரப்பு எச்சரித்துள்ளது.