Singer KK: 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் பாடகர் கே.கே-வின் டாப் 15 பாடல்கள்! | #RIPKK | Visual Story

பிரபல பாடகர் KK மாரடைப்பால் காலமானார். கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்த KK-வுக்கு திடீரென நெஞ்சில் வலி ஏற்பட்டிருக்கிறது.

மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள். KK என்கிற கிருஷ்ணகுமார் குன்னத்தின் வயது 53.

இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி எனக் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் பாடியிருக்கிறார் கே.கே.

90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் பாடகராக வலம்வந்த கே.கே-வின் டாப் 15 தமிழ்ப் பாடல்கள் இதோ…

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘மின்சார கனவு’ படத்தில் இடம்பெற்ற ‘ஸ்ட்ராபெர்ரி கண்ணே’ பாடல் இன்றும் இளைஞர்களின் இதயத்துடிப்பு. இந்தப் பாடலை கே.கே, ஃபெபி மணியுடன் இணைந்து பாடியிருப்பார்.

யுவன் – கே.கே – நா.முத்துக்குமார் காம்போவின் ஆகச்சிறந்த பாடல். ஸ்மார்ட்போன் இல்லாத காலத்தில், ‘மன்மதன்’ படத்தின் இந்த ‘காதல் வளர்தேன்’ பாடல்தான் பலரின் காலர் டியூனே! லவ் பெயிலியர் என்றால் இந்தப் பாடல்தான் ரிப்பீட்டு!

தாய் – மகன் உறவின் பாசப் பிணைப்பையும் பெருமைகளையும் சொல்லும் ‘நீயே நீயே’ பாடல் இடம்பெற்ற படம் ‘எம்.குமரன் – சன் ஆஃப் மகாலட்சுமி’. வாலியின் வரிகளில் கே.கே.வின் குரலில் இன்றுமே பலமுறை கேட்கத்தூண்டும் வசீகரமான பாடல்.

நாயகனின் குற்றவுணர்வை கே.கே தன் குரலால் வெளிக்கொண்டு வந்திருப்பார். யுவன் – நா.மு – கே.கே. காம்போவின் மற்றொரு ஹிட்டான இந்த ‘வார்த்தை ஒண்ணு…’ பாடல் இடம்பெற்ற படம் ‘தாமிரபரணி’!

ஹாரிஸ் ஜெயராஜின் மிகப்பெரிய ஹிட் பாடல்களில் ஒன்று ‘காதலிக்கும் ஆசையில்லை’. கே.கே-வுடன் இணைந்து சின்மயி, டிம்மி, மஹதி ஆகியோர் பாடியிருப்பார்கள். பக்கா ரிங்டோன் மெட்டீரியல் இந்த ‘செல்லமே’ பாடல்!

‘கில்லி’ படத்தின் ‘அப்படிப்போடு’ பாடலை தமிழகமே கொண்டாடியது. வித்யாசாகரின் துள்ளல் இசை, விஜய், த்ரிஷா நடனம் தாண்டி, கே.கே, அனுராதா ஸ்ரீராமின் மேஜிக்கும் இதன் வெற்றிக்குக் காரணம்.

‘7G ரெயின்போ காலனி’ படத்தில் ‘நினைத்து நினைத்து’ பாடலின் இரண்டு வெர்ஷன்கள் இருந்தாலும், கே.கே-வின் வெர்ஷனில் கூடுதலாக சோகம் இழையோடும். அவரின் குரல் நா.முத்துக்குமாரின் வரிகளுக்கு வலு சேர்த்திருக்கும்.

‘காக்க காக்க’ படத்தின் ‘உயிரின் உயிரே’ பாடலின் தொடக்கத்தில் ஹாரிஸின் இசை நம் உடம்பில் அதிர்வுகளை உண்டாக்கினால், பின்னர் வரும் கே.கே.வின் குரல் உள்ளத்தில் அதிர்வுகளை உண்டாக்கும்.

மென்சோகமும் மெலடியும் தாண்டி குத்துப்பாடல்களும் கே.கே.வின் ஸ்பெஷல்தான். அதற்கான சான்று, ‘சாமி’ படத்தின் இந்த ரகளையான டான்ஸ் பாடல் ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு…’

‘Feel My Love’ – ‘குட்டி’ படத்தில் தனுஷ், ஸ்ரேயாவின் பின்னால் காதலைச் சொல்லிக்கொண்டே ஓட, ஒட்டுமொத்த இளைஞர் பட்டாளமும் தங்களை கே.கே-வாக பாவித்து, தங்களின் காதலை நினைத்து இந்தப் பாடலைக் கேட்டனர்/பாடினர்.

‘கண்ட நாள் முதல்’ படத்தின் ‘பனித்துளி’ பாடலுக்கு மானசீகமாக ஹார்ட்டின் விடாதவர்களே இருக்கமுடியாது. யுவன் இசையில், கே.கே-வுடன் இணைந்து ஸ்ரேயா கோஷலும், தன்வி ஷாவும் இந்தப் பாடலைப் பாடியிருப்பார்கள்.

‘மெலடி கிங்’ வித்யாசாகரின் ஹிட் லிஸ்ட்டில் மறக்காமல் இடம்பிடிக்கும் ‘பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது’ பாடல், ‘உயிரோடு உயிராக’ படத்தில் இடம்பெற்றிருக்கும். கே.கே-வுடன் ஸ்ரீனிவாஸ், ஹரிணி இணைந்து பாடியிருப்பார்கள்.

வித்யாசாகர் இசையில் ‘ஆதி’ படத்தில் சுஜாதா மோகனுடன் இணைந்து கே.கே பாடிய தத்துவப் பாடல் ‘லேலக்கு லேலக்கு லேலா’. இப்போது கேட்டாலும் தோல்விகளைக் கடந்து செல்லும் உற்சாகத்தைக் கொடுக்கும்.

‘தாஸ்’ படம் யுவனின் ஆல்பமாக பெரும் ஹிட்டடித்தது. அதில் குறிப்பிடத்தகுந்த பாடல் கே.கே மற்றும் சாதனா சர்கம் பாடிய ‘சக்கப்போடு போட்டாலே…’.

ஆல்பமாக பெரும் ஹிட்டடித்த ’12B’ படத்தில் ஹாரிஸ் இசையில் ‘எங்கேயோ போகின்ற மேகம் நிக்குது’ பாடலையும், ‘லவ் பண்ணு’ (‘ஒரு புன்னகைப் பூவே’) பாடலையும் கே.கே-வே பாடியிருப்பார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.