குரங்கு அம்மை வைரஸ் பிரிட்டன், ஐரோப்பிய, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி வருவதால், இந்தியாவில் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. குரங்கு அம்மை அறிகுறிகளுடன் வருபவர்களை கண்காணித்து உடனே தனிமைப்படுத்த மாவட்ட சுகாதார இணை இயக்குனர்கள் மற்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், உடலில் தடிப்புகள் இருப்பவர்கள், குரங்கு அம்மை இருக்கும் நாட்டுக்கு கடந்த 20 நாட்களில் சென்று வந்தவர்கள், குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குரங்கை அம்மை இருக்கலாம் என சந்தேகப்படும் நபர்கள் அனைவரும் தடுப்புகள் நீக்கி புதியதோர் உருவாகும் வரை அல்லது மருத்துவர்கள் கூறும் வரை தனிமையில் இருக்க வேண்டும். மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு இவர்களின் தகவல்கள் தெரிவிக்கப்படவேண்டும். நோயாளிகளின் ரத்தம், சளி மற்றும் கொப்புளங்களிலிருந்து எடுக்கப்படும் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஆய்வுக்கு அனுப்பப்படவேண்டும்.
குரங்கை அம்மை ஒருவருக்கு உறுதியானால் அவருடன் கடந்த 21 நாட்களில் தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிந்து கண்காணிக்கவேண்டும். விமான நிலைய அதிகாரிகளுக்கு எந்த நாட்டில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் காய்ச்சல், தலை வலி, தசை வலி மற்றும் சோர்வு ஆகிய அறிகுறிகளுடன் வந்தால் அவர்களின் மாதிரிகள் எடுக்கப்படவேண்டும். பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் அறிகுறி கொண்ட பயணிகளுக்கு கண்டிப்பாக மாதிரிகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.