சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் `பேரன்ட்டீனிங்’ என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளை களுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள். பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களைப் பெற்றோர் சமூகத்துக் குரலாக ஷர்மிளாவும் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அவள் விகடன் இதழில், 13 அத்தியாயங்களில் வெளிவந்திருக் கின்றன. பெற்றோருக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்குமான உறவுச்சிக்கல் பற்றி பகிர இன்னும் ஏராளமான விஷயங்கள் இருப்பதால் விகடன்.காமில் தொடர்ந்து பேசுகிறார்கள் டாக்டர் ஷர்மிளாவும் அவரின் மகள் ஆஷ்லியும்.
டாக்டர் ஷர்மிளா
கொரோனா காலத்தில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்த தகவல்களைக் கேட்டு அதிர்ச்சியடைந்தோம். கிராமங்களில் மிக அதிகமாக உள்ள இந்தத் திருமணங்கள், பதின்மவயது கர்ப்பங்களுக்கும் காரணமாகின்றன. அதாவது, இந்தியாவில் நிகழும் குழந்தைத் திருமணங்கள் கிராமங்களில் 9.2 சதவிகிதமாகவும், நகரங்களில் 5 சதவிகிதமாகவும் இருக்கின்றன. ஆயிரம் பெண்களில் 62 பெண்கள் பதின்ம வயது கர்ப்பிணிகளாக இருப்பதாக லேட்டஸ்ட் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2050-ம் ஆண்டில் உலகின் மிக அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடாக இந்தியா மாறக்கூடும். பதின்பருவ பிரசவங்களும் இதற்கொரு காரணம்.
இதுபோன்ற பதின்பருவ கர்ப்பங்கள் அந்த வயதுப் பெண்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பெரிதும் பாதிப்பதோடு, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளையும் பாதிக்கின்றன. இந்த வயதில் குறைப்பிரசவங்கள், கருச்சிதைவு உள்ளிட்டவை மிகவும் சகஜம்.
டீன் ஏஜ் கர்ப்பத்தால் என்ன பிரச்னை?
பதின்பருவம் என்பது குழந்தைப்பருவத்திலிருந்து வளரிளம் பருவத்தில் அடியெடுத்து வைப்பது. உடல்ரீதியாக, உணர்வு ரீதியாக மாற்றங்களை எதிர்கொள்ளும் பருவம் அது. உடல்ரீதியாக முழுமையான வளர்ச்சியே முற்றுப்பெறாத நிலையில் நிகழும் இத்தகைய கர்ப்பங்களும் பிரசவங்களும் அந்தப் பெண்ணின் உடல்நலனைப் பெரிதும் பாதிக்கும்.
15 முதல் 19 வயதுப் பெண்களுக்கு இதனால் பேறுகால இறப்புகள் நிகழ்வதாகவும், உலக அளவில் நிகழும் பேறுகால மரணங்கள் 15 முதல் 49 வயதுப் பெண்கள் உயிரிழப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. பதின்மவயதில் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்கள் சமூகப் புறக்கணிப்புகளுக்கும், கணவரின் வன்கொடுமைக்கும் ஆளாகிறார்கள்.
18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படும் பெண்களே திருமண உறவில் கணவரால் குடும்ப வன்முறையை அதிகம் சந்திக்கிறார்கள் என்றும் ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இளவயதிலேயே திருமணம் முடிக்கப்படுவதால் படிப்பைப் பாதியோடு நிறுத்த வேண்டிய சூழலுக்கு அவர்கள் ஆளாகிறார்கள். திருமணத்துக்குப் பிறகும் பிரசவத்துக்குப் பிறகும் அவர்களால் படிப்பைத் தொடர முடிவதில்லை. அது அவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பெரிதும் பாதிக்கிறது.
பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஆண் பிள்ளைகளுக்கும் பதின்ம வயதுத் திருமணம் என்பது சவாலானதுதான். அந்த வயதில் ஒரு குழந்தைக்குத் தகப்பனாகப் பொறுப்பேற்பது அவர்களது வாழ்க்கையை மிரட்சிக்குள்ளாக்குவதாக அமையக்கூடும். அந்த வயது ஆண்களுக்கு, பெண்கள் எதிர்கொள்வது போன்ற உடல்ரீதியான பாதிப்புகள் வர வாய்ப்பில்லை என்றாலும் படிப்பை பாதியிலேயே கைவிடுவது, அந்த வயதிலேயே வருமானம் ஈட்ட நிர்ப்பந்திக்கப்படுவது என மற்ற சவால்கள் அவர்களுக்கும் உண்டு.
ஒரு பெண்ணின் உடல் கர்ப்பத்தைச் சுமக்கவும், குழந்தையைப் பெற்றெடுக்கவும் 20 வயதுக்குப் பிறகே முழுமையாகத் தயாராகிறது. உடல் முழுமையான வளர்ச்சியை எட்டாத நிலையில், ஒரு பெண் கர்ப்பம் தரிக்கும்போது அது உள்ளே வளரும் கருவுக்குத் தகுந்தபடி தன்னை மாற்றிக்கொள்ள முயலும். வளர்ச்சி ஒரு பக்கமும் தன்னுள்ளே வளரும் இன்னோர் உயிருக்கான அட்ஜஸ்ட்மென்ட் இன்னொரு பக்கமுமாக உடல் சற்றுக் குழம்பிப்போகும்.
பதின்வயது கர்ப்பம் மற்றும் பிரசவத்தால் உடலுக்கு ஏற்படும் குழப்பங்களுக்கு சற்றும் குறைவின்றி மனதும் குழம்பிப்போகும். குழந்தைப் பிறப்புக்குப் பிறகு அந்தப் பெண்ணின் அல்லது பதின்வயது ஆணின் வாழ்க்கையே மாறிப்போகும். வயதுக்கு மீறிய ஸ்ட்ரெஸ், பிள்ளை வளர்ப்பு குறித்த அழுத்தம், பிரசவம் ஏற்படுத்தும் மனநல பாதிப்புகள் என அந்தப் பட்டியல் நீளமானது.
பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
இதையெல்லாம் மீறி உங்கள் டீன்ஏஜ் பெண் கர்ப்பமாகிவிட்டாள், உங்கள் டீன் ஏஜ் மகன் இன்னொரு பெண்ணின் கர்ப்பத்துக்கு காரணமாகிவிட்டான் என்ற நிலையில், அவர்களுக்கு யதார்த்தத்தைப் புரிய வைத்து, அந்த அதிர்ச்சியிலிருந்து மீட்டெடுக்கும் கவுன்சலிங் மற்றும் தெரபி கொடுக்கப்பட வேண்டும். இந்த கவுன்சலிங்கும் தெரபியும் பெற்றோருக்கும் தேவையாக இருக்கும்.
அந்தச் சூழ்நிலையில் கோபப்படுவதோ, தவறான முடிவுகளை எடுப்பதோ பிள்ளைகளின் எதிர்காலத்தையே பாதிக்கலாம். பெற்றோராக இந்தச் சூழலைக் கையாள்வதில் தர்மசங்கடமாக உணர்ந்தால் நிபுணர்களின் உதவியை நாடலாம். எப்படியிருப்பினும் நடந்த தவற்றை பிள்ளைகளுக்குப் புரிய வைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் அவர்கள் மீண்டும் மீண்டும் அதைச் செய்யாமலிருக்கும்படி பார்த்துக்கொள்வது. அதற்கு உங்களுடைய அன்பும் ஆதரவும்தான் தீர்வு.
டேக்ஹோம் மெசேஜ்
இப்படியெல்லாம் நடக்காமலிருக்க பிள்ளைகளிடம் பெற்றோர் மனம் விட்டுப் பேச வேண்டும். டீன்ஏஜ் கர்ப்பம் பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அவர்களிடம் இயல்பாகப் பேசலாம். பாதுகாப்பான செக்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் இந்தத் தலைமுறை பிள்ளைகளுக்கு அவசியமாகிறது. இந்த அறிவுரை மகள்களைப் பெற்றவர்களுக்கு மட்டுமல்ல, ஆண் குழந்தைகளின் அம்மா அப்பாவுக்கும்தான்.
ஆஷ்லி
“நான் அப்போது 3வது படித்துக்கொண்டிருந்தேன். என் தோழி என்னை பாத்ரூமுக்கு அழைத்துச் சென்று, செக்ஸ் என்றால் என்னவென்று விளக்கினாள். வீட்டுக்கு வந்ததும் அதை அம்மாவிடம் சொன்னேன். `பரவால்லையே… எனக்கெல்லாம் பல வருஷம் கழிச்சுதான் இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சது…’ என ஆச்சர்யப்பட்டார். தலைமுறைகள் மாற மாற, சித்தாந்தங்களும் பார்வைகளும் மாறுகின்றன. இந்தக் காலத்து டீன்ஏஜ் பிள்ளை களுக்கு செக்ஸ் என்றால் என்னவென்று தெரியும்.
எப்படியோ, யார் மூலமோ அவர்களுக்கு அது தெரிய வருகிறது. அப்படிக் கேள்விப்படுகிற விஷயங்கள் பற்றி அவர்கள் உங்களிடம் ஏதேனும் சந்தேகங்கள் கேட்டால், உடனே அவர்களை ஜட்ஜ் செய்யாமல், விளக்கம் கொடுங்கள். உங்கள் பிள்ளைகள் செக்ஸ் பற்றிப் பேசுவதாலேயே அவர்களுக்கு அதில் அனுபவம் இருக்க வேண்டும் என்றோ, நீங்கள் பயப்படும்படியான சம்பவங்கள் உங்கள் வீட்டிலும் நடந்துவிடும் என்றோ நினைக்காதீர்கள்.
நண்பர்களின் தாக்கத்தால் அல்லது காதலில் விழும் அனுபவத்தால் அந்த வயதில் அவர்களுக்கு செக்ஸ் குறித்த தேடல் அதிகரிக்கும். சிலர் அடுத்தகட்டமாக, உடல்ரீதியான கவர்ச்சிக்குள்ளாகி தேவையற்ற கர்ப்பத்துக்கு ஆளாவதும் நடக்கிறது. இதுபோன்ற சூழல்களைத் தவிர்க்க நினைத்தால் பெற்றோர், பிள்ளைகளிடம் மனம்விட்டுப் பேச வேண்டும்.
“இதையெல்லாம் என் பொண்ணுகிட்ட, பையன்கிட்ட எப்படிப் பேசறது… அவங்க இதையெல்லாம் கேட்டுக்க மாட்டாங்க” என நீங்களாக முடிவுக்கு வராதீர்கள். நீங்கள் பேசினால் உங்கள் பிள்ளைகள் நிச்சயம் கேட்டுக்கொள்வார்கள். ஒரு விஷயம் நடந்த பிறகு, புலம்புவதற்குப் பதில் அது நடக்காமல் தடுப்பதுதானே புத்திசாலித்தனம்…”