வாஷிங்டன்,
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியும், உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் டுவிட்டரை வாங்குவதாக அறிவித்தது முதல் சர்வதேச அளவில் கவனம் பெறும் நபராக மாறினார். ஆனால் அந்த டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் பின்னர் நடைபெறவில்லை. ஆனால் டுவிட்டரின் 9.2% பங்குகளை வைத்திருக்கும் அவர் தற்போது நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக இருக்கிறார்.
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு அதிகளவில் ஊதியம் பெற்ற நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பட்டியலை ஃபார்ச்சூன்500 இதழ் சமீபத்தில் வெளியிட்டது.
அந்த பட்டியலில் எலான் மஸ்க் இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.82 லட்சம் கோடி ஊதியம் பெற்று முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் (6 ஆயிரம் கோடி ) உள்ளார். 3-வது இடத்தில் என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் உள்ளார். 4-வது இடத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனர் ரீட் ஹாஸ்டிங்க் இடம் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் சுமார் 2 ஆயிரத்து 400 கோடி ஊதியம் பெற்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெல்லா 7-வது இடத்தில் உள்ளார்.