திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜோஜு ஜார்ஜ். ஜோசப், நாயாட்டு உள்பட ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் தனுஷின் ஜகமே தந்திரம் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் இடுக்கி அருகே வாகமண் பகுதியிலுள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் அனுமதியின்றி சிலருடன் கார் ரேசில் ஈடுபட்டார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து இடுக்கி மாவட்ட வட்டார போக்குவரத்துத்துறை, நடிகர் ஜோஜு ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்தது. மேலும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அவருக்கு மோட்டார் வாகனத்துறை அதிகாரி உத்தரவிட்டார். இதன்படி கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவர் இடுக்கி வட்டார போக்குவரத்து அதிகாரி முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது தேயிலை தோட்டத்தில் கார் ரேஸ் நடத்த அனுமதி இல்லை என்பது குறித்து தனக்கு தெரியாது என்று அவர் கூறினார். ஆனாலும் சட்டத்தை மீறியதால் அவருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகையை நேற்று ஜோஜு ஜார்ஜ் ஆன்லைன் மூலம் கட்டினார்.
