பல கல்லூரிப் பெண்களின் தற்சமய ரகசிய ‘சிநேகிதன்’ மாதவன். அலைபாயுதே படத்தின் ஹீரோ! நெருக்கமானவர்கள் கூப்பிடும் செல்லப்பெயர் மேடி (Maddy).
படத்தில் வருவது மாதிரியே நிஜத்திலும் அலைபாயும் கண்களும் கேசமுமாகத் துறுதுறுவென்று இருக்கிறார் மாதவன். இந்தியில் 46 டி.வி. சீரியல்களும், இரண்டு விளம்பரப் படங்களும் பண்ணிவிட்டு தமிழுக்கு வந்திருக்கிறார். பிறந்து வளர்ந்ததெல்லாம் பீகாரில். இப்போது வசிப்பது மும்பையில்!
சொல்லுங்க. இந்த நிமிஷம் எப்படி ஃபீல் பண்றிங்க? சினிமாவோட வீச்சு பிரமிப்பா இருக்கு. போகிற இடமெல்லாம் அடையாளம் கண்டு அப்படியே மொய்ச்சுக்கிறாங்க. அலைபாயுதே படம் முடிச்சதுக்கு அப்புறமா, ஒரு டி.வி. சீரியலுக்காக லண்டன், ஜூரிச், ஸ்பெயின், ஜெர்மனின்னு போயிட்டு வந்தேன். அங்கெல்லாம்கூட என்னை அடையாளம் கண்டுக்கிட்டாங்கன்னா ஆச்சரியமா இருக்கு! ஆனா, இந்தப் புகழுக்குக் காரணமா நான் பெரிசா எதுவும் பண்ணிடலே. மணிரத்னம், ஒரு மரக்கட்டையைக்கூட அற்புதமா நடிக்க வெச்சுடுவார்.
உங்க குடும்பம், ஸ்கூல் பற்றியெல்லாம் சொல்லுங்க.
அப்பா ஜாம்ஷெட்பூர்ல டாடா ஸ்டீல் நிறுவனத்துல அதிகாரியா இருந்தார். அம்மா அங்கேயே ‘இந்தியன் வங்கி’யின் சீஃப் மானேஜர் அங்கே தென்னிந்திய பெண்கள் எல்லாரும் சேர்ந்து தட்சிண பாரத் மகிளா சமாஜ்னு சர்வதேச தரம் வாய்ந்த பள்ளியொன்றை நடத்தி வந்தார்கள். அதில்தான் நான் படிச்சேன்.
ஸ்கூலில் பொழுதுபோக்கு என்ன..?
அட. படிப்புதாங்க பொழுதுபோக்கே. மீதி விஷயங்கள்லதான் சீரியஸா இருப்பேன். என்.சி.சி., பேஸ்கட் பால், கிரிக்கெட், பேச்சுப் போட்டினு மீதி எல்லா விஷயங்கள்லயும் துடியா இருப்பேன். பீகார் பசங்களுக்குத் தமிழர்கள்னா கொஞ்சம் இளப்பம். அதனால, நம்ம வீரத்தைக் காட்ட அப்பப்போ அடிதடி, ரகளைன்னு இறங்கறதும் உண்டு. ஆனா, படிப்புலயும் சோடை போகலைன்னு வெச்சுக்குங்க. பள்ளிப்படிப்பு முடிஞ்சதும், “ரோட்டரி மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ‘கலாசார தூதுவராக ஒருவருஷம் கனடாவுக்கு அனுப்பப் பட்டேன். அப்புறம் இந்தியா திரும்பி, கோலாப்பூரில் எலக்ட்ரானிக்ஸ் படிப்பு முடித்தேன். அப்போ என். சி. சி-யில் சிறப்பு தேர்ச்சி பெற்றதால், அரசாங்கம் மூலமாக லண்டனுக்கும் போய் வந்தேன்.
மாடலிங். டி.வி. சீரியல். சினிமா என்று வந்தது எப்படி..?
என்.சி.சி-ல இருந்தப்பவும் வெளி நாடுகளுக்குப் போனப்பவும் கிடைச்ச அனுபவங்களைக் கொண்டு கோலாம்பூர்ல பர்சனாலிடி டெவலப்மெண்ட் பயிற்சி வகுப்பு ஒண்ணை ஆரம்பிச்சேன். அது நானே எதிர்பார்க்காத அளவுக்குப் பயங்கரமா பிக்கப் ஆயிடுச்சு. இதேமாதிரி பயிற்சி வகுப்பை மும்பையிலும் நடத்துன்னு சில நண்பர்கள் கேட்டுக்கிட்டாங்க. அங்கே என்னைப் பார்த்துட்டு சிலர், நீங்க மாடலிங் பண்ணலாமே?னு ஊதிவிட. சூப்பரா போட்டோ ஆல்பம் ஒண்ணு தயார் பண்ணிக்கிட்டு ஜீ டி. வி ஆபீஸ்க்குப் போனேன். அங்கே பிரபல சீரியல் தயாரிப்பாளர்களான டோனி, தியோசிங் ஆகியோர் என் போட்டோக்களைப் பார்த்துட்டு, உடனே ‘பனே கி அப்னி பாத்’ என்கிற புது சீரியலில் சான்ஸ் கொடுத்தார்கள். அதன்பிறகு இந்தியிலேயே 45 டி. வி. சீரியல்கள் நடித்தேன். நடுவில், காமிராமேன் சந்தோஷ் சிவன் அறிமுகம் கிடைத்து, பவுடர் விளம்பரம் ஒன்றில் நடித்தேன். அவரே என்னை மணிரத்னத்திடம் அறிமுகம் செய்துவைத்தார். ‘இருவர்’, ‘உயிரே’ படங்களில் வாய்ப்பு தட்டிப்போய், ‘அலைபாயுதே’-க்கு ஒப்பந்தமானேன்.
“என் மனம் அலைபாயுதே என்று நிஜத்தில் எந்த பெண்ணிடமாவது சொன்னதுண்டா..?”
எக்கச்சக்கப் பொண்ணுங்களிடம் சொல்லியிருக்கேன். ஸ்கூல் பீரியடில்! சில பொண்ணுங்க கண்டுக்கவே கண்டுக்காது சில முறைக்கும்! நிஜத்தில் ‘வொர்க்-அவுட்’ ஆனது வேற விதம்! என் மனைவி சரிதாதான் முதன்முதலில் என்னிடம் தன் மனதை வெளிப்படுத்தினாங்க.
மேட்டர் சுவாரஸ்யமா இருக்கே.?
கோலாப்பூர்ல ‘பர்சனாலிடி டெவலப்மெண்ட்’ பயிற்சி வகுப்பு நடத்தினப்ப, எனக்கு மாணவியாக வந்து சேர்ந்தவர்தான் சரிதா, ஏர்ஹோஸ்டஸ் ஆகணும்கிற லட்சியத்தோட வந்தாங்க. நினைச்ச மாதிரியே ஏர்-ஹோஸ்டஸ் ஆன பிறகும்கூட, அடிக்கடி என்னைப் பார்க்க வந்தாங்க. ஒருநாள் நான் இங்கே வந்தது பாடம் கத்துக்க மட்டுமில்லை. உங்களைப் பார்க்கவும்தான்னு சொல்லிட்டாங்க. அதைக் கேட்டதும் நமக்கு ‘ஜிவ்’வுனு ஆயிடுச்சு. அப்புறம் சில வருஷம் லவ் பண்ணிட்டு, கடந்த ஜூலை மாதம் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். (மகாராஷ்டிரப் பெண்ணான சரிதாவுக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியுமாம்! மாதவனுக்கு.?! தமிழ் பேச மட்டுமே தெரியும்.)
நீங்கள் திருமணமானவர் என்ற உண்மையை வெளியிடுவதில் தயக்கம் எதுவும் இருந்ததா.?
இல்லை. கொஞ்ச நாள் கழித்து தெரியப்படுத்தலாம் என்று பல பேர் யோசனை சொன்னார்கள் அதை நான் ஏற்கவில்லை. பல்லாயிரம் ரசிகைகளுக்குப் ‘பொய்க் கனவு’ ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, சொந்தமான மனைவியின் மனதை நோகடிக்கலாமா?
உங்க மனைவிக்குப் பிடித்த ஹிரோ யார்…?
ரித்திக் ரோஷன் இதுல கொடுமை என்னன்னா, ரித்திக்கோட ஆளுயர படத்தை என்னுடைய கப்போர்டில் ஒட்டிவைத்திருக்கிறார். இதைப் பார்த்தாவது உங்க உடம்பையும் தேத்துங்கனு அட்வைஸ் வேறு! இப்ப நானும் சினிமா நடிகன் ஆயிட்டேனா. சின்சியரா ‘ஜிம்’முக்கு போய், எக்சர்சைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.
‘அலைபாயுதே’ ஷூட்டிங் ஸ்பாட்டுல ஷாலினியோட உங்க பழக்கம் எப்படி..?
ஒரே ரகளை இரண்டு பேருக்கும் ஒருத்தரையொருத்தர் சீண்டி வம்புக்கு இழுக்கிறதுன்னா, அல்வா சாப்பிற மாதிரி. அப்போ ஷாலினிக்கும் அஜீத்துக்கும் ரொமான்ஸ் ஆரம்பமான சமயம்… ரொம்ப நாள் இந்த விஷயத்தை ரகசியமா வெச்சிருந்தாங்க ஷாலினி நான் எப்படியோ மோப்பம் பிடிச்சுட்டேன். அப்புறம் விடுவேனா..? ஷாலினி செல்போன் எடுத்தாலே – பேசவிடாம, குறுக்கே புகுந்து லூட்டி அடிப்பேன். அப்போ, எனக்கும் கல்யாணமான புதுசு! பழிக்குப் பழியா, என் மனைவி போன் பண்ணறச்சே நான் பேசவிடாம தொந்தரவு பண்ணுவாங்க ஷாலினி. வெரி ஸ்விட் கேர்ல்.
‘அலைபாயுதே படம் பார்த்தபோது என்ன உணர்ந்தீர்கள்.?
அலைபாயுதே நான் பார்க்கவில்லை. அதாவது. வெறும் படமாக பார்க்கவில்லை. என் ஒரிஜினல் பர்சனாலிட்டியின் பிரதிபலிப்பைப் பார்த்தேன்.
உங்களுக்குப் பிடிச்ச நொறுக்குத் தீனி என்ன..?
பாணிபூரி. அப்புறம், சுடச்சுட வாட்டி எடுத்த சோளக்கொண்டையில் உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு பூசி சாப்பிடறதுன்னா உலகையே மறந்துருவேன்.
பிடிச்ச ஹாபி.?
இன்டர்நெட் சாட்-ரூம்ல புகுந்து அரட்டை அடிக்கிறதுதான்! அதுவும் ஒரே சமயத்துல நாலு கம்ப்யூட்டர்ல நாலு வேறு நபர்களாக மாறி அரட்டை அடிப்பேன். தீவிரவாதியாக. ‘சூஸி16’ங்கிற பேர்ல பதினாறு வயது இளம் பெண்ணாக. கம்ப்யூட்டர் மேதாவியாக. ஜாலி இளைஞனாக. என்று நான்கு வேடத்தில் அரட்டை அடிப்பேன். தப்பித்தவறி இளம் பெண்ணுக்குப் பதிலா தீவிரவாதி மாதிரி பேசிட்டேன்னு வச்சுக்குங்க. நம்ம குட்டு வெளிப்பட்டுடும். அஞ்சாறு மாசமா இந்த நாலு ரோலையும் திறமையா செஞ்சுட்டு வர்றேன்! நான் நிஜமாகவே இளம்பெண்ணுனு நினைச்சு ‘சூஸி16’க்கு இப்ப பதினாறு லவ்வர்ஸ் இருக்காங்க. தீவிரவாதிக்கு 60 பிரெண்ட்ஸ் இருக்காங்க. கம்ப்யூட்டர் மேதாவிக்குத்தான் பாவம்… அஞ்சாறுக்கு மேல நண்பர்கள் தேறவில்லை. இந்த மாதிரி கேம் ஆடுவதன் மூலமாக, என் நடிப்புத் திறமைக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது.