காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான `நேஷனல் ஹெரால்டு’ நாளிதழின் பங்குகள் விற்பனை தொடர்பான பணமோசடி வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியும் ஜூன் 8-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்க இயக்குநரகம் இன்று சம்மன் அனுப்பியிருக்கிறது.
அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களான அபிஷேக் மனு சிங்வி, ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். “ஜூன் 8-ம் தேதி நேஷனல் ஹெரால்டு நாளிதழுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் விசாரணை நடத்துவதற்காகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சோனியா காந்தி விசாரணைக்கு ஆஜராகத் தீர்மானித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அவர் ஜூன் 5-ம் தேதி இந்தியாவில் இருக்கமாட்டார் என்பதால் விசாரணை தேதியை ஒத்திவைக்குமாறு விசாரணை நிறுவனத்துக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.
ஆளும்கட்சி இது போன்ற போலி மற்றும் ஜோடிக்கப்பட்ட வழக்குகளை பதிவு செய்வதன் மூலம் கோழைத்தனமான சதியில் வெற்றி பெறமுடியாது. அதை மோடி அரசு அறிந்து கொள்ள வேண்டும்.
சுதந்திர இயக்கத்தின் குரலான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையைத் தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியாது, சோனியா காந்தி, ராகுல் காந்தியைப் பயமுறுத்தவும் முடியாது. காங்கிரஸ் தலைமை அச்சமற்றது… விசாரணை அமைப்பின் முன் ஆஜராகத் தயாராக உள்ளது. இதுபோன்ற தந்திரங்களுக்கு நாங்கள் பயப்படவும் மாட்டோம், தலைவணங்கவும் மாட்டோம். நாங்கள் சட்டரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கடுமையாகப் போராடுவோம்.
சோனியா காந்தி, ராகுல் காந்தியின் தலைமையில் முழுக் கட்சியும் தொண்டர்களும் அவர்களுடன் தோளோடு தோள் நிற்பார்கள். நாட்டின் ஜனநாயகத்தின் மீதான இந்தத் தாக்குதலில் நாங்கள் போராடி வெற்றி பெறுவோம். சுதந்திர இயக்கத்தின் முக்கிய மந்திரமான சுதந்திரம் ஆபத்தில் உள்ளது. இன்று மீண்டும், ஆங்கிலேயர் ஆட்சியை ஆதரிக்கும் சித்தாந்தம், ‘சுதந்திர இயக்கத்தின் குரலை’ நசுக்க சதி செய்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி இந்த சதியின் தலைவராக இருக்கிறார், அதைச் செயல்படுத்த அவருக்கு ‘பிடித்தமான ஆயுதம்’ அமலாக்கத்துறை. பிரச்னைகளை திசை திருப்பும் அரசியலில் மோடி அரசு நிபுணத்துவம் பெற்றுள்ளதாலும், பழிவாங்கும் உணர்வில் கண்மூடித்தனமான நிலையிலும் இருப்பதாலும், நாட்டை தவறாக வழிநடத்தவே இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது” எனப் பேட்டியளித்துள்ளனர்.