(கோப்பு புகைப்படம்)
திருமணம் நடைபெற இருக்கும் சமயம் பார்த்து மணப்பெண் கல்யாணத்தை நிறுத்தும் சம்பவங்கள் அண்மைக்காலமாக இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்படியான சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்தேறியிருக்கிறது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (மே 29) கான்பூர் தேஹத் மாவட்டத்தில் நடைபெற இருந்த திருமணத்தை ஃபோட்டோகிராபரை நியமிக்கவில்லை எனக் கூறி மணப்பெண் திடீரென நிறுத்தியது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
மங்கல்புர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் மகளுக்கும், போக்னிப்புர் பகுதியைச் சேர்ந்த நபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணமும் நடைபெற இருந்தது. இதற்காக வடமாநிலத்தவர்கள் வழக்கப்படி மணப்பெண்ணுக்கு மெஹந்தி சடங்குகள் நடத்தப்பட்டு, திருமணத்துக்கான அலங்காரங்கள் என கல்யாணவீடு கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது.
இதனையடுத்து திருமணத்தின் முக்கியமான சடங்கு நடைபெற இருந்த சமயத்தில் மணப்பெண் திருமணத்தையே நிறுத்தியிருக்கிறார். ஏனெனில் தனது வாழ்வின் முக்கியமான தருணத்தை படம்பிடித்து பதிவு செய்வதற்காக மணமகன் தரப்பில் இருந்து ஒரு ஃபோட்டோகிராபரை கூட நியமிக்கவில்லை என அவர் கூறியிருக்கிறார்.
இதனால் மிகவும் வருத்தத்துடனும், கோபத்துடனும் மணமேடையை விட்டு வெளியேறி அண்டை வீட்டிற்குச் சென்றிருக்கிறார் மணப்பெண். அவருடனேயே பின்னால் சென்ற உறவினர்கள், பெரியவர்கள் சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை. திருமணம் நடக்கும் நாள் குறித்தே கவலைப்படாத இவரா என்னை காலம் முழுக்க பார்த்துக்கொள்ளப் போகிறார்? என மணப்பெண் வேதனையுடன் கேள்வி எழுப்பியிருக்கிறார். தொடர்ந்து மணமகள் தனது முடிவில் இருந்து பின்வாங்காமலேயே இருந்திருக்கிறார்.
இதனிடையே இந்த விவகாரம் எப்படியோ காவல்துறை காதுக்கு சென்றிருக்கிறது. மங்கல்புர் காவல் நிலையத்தில் வைத்து இருதரப்பு வீட்டாரும் திருமணத்துக்கு செலவு செய்யப்பட்ட பணத்தை திருப்பிக் கொடுத்து வீடு திரும்பியிருக்கிறார்கள்.
ஃபோட்டோ மற்றும் வீடியோகிராபரை பணியமர்த்தாததாலேயே மணப்பெண் திருமணத்தை நிறுத்தியிருக்கிறார் என மங்கல்புர் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் டோரி லால் கூறியிருக்கிறார். ஆனால், திருமணம் நிறுத்தப்பட்டதற்கு வேறு ஏதும் காரணம் இருக்குமோ என்று கிராம மக்களிடையே சலசலப்பும் ஏற்பட்டது. தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்கள் வாயிலாக வைரலாக பரவி இருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM