டெல்லியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆசிரியரான ஆயுஷி குடிமைப் பணிகள் தேர்வில் (UPSC) இந்திய அளவில் 48-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். 29 வயதாகும் ஆயுஷி பிறந்தது முதலே பார்வைக் குறைபாடு உடையவர். இருப்பினும் தன்னுடைய கடின உழைப்பால் ஐந்தாவது முயற்சியில் இந்த வெற்றியை எட்டியுள்ளார். ஆயுஷி மிகவும் சாதாரணமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்.
இந்திரா காந்தி தொலைதூரப் பல்கலைக்கழகத்தில் வரலாறு முதுகலை பட்டம் பெற்றார் ஆயுஷி. 2012-ம் ஆண்டு ஆசிரியராக பணியில் சேர்ந்தவர், டெல்லி அரசு பள்ளியில் 2019- ம் ஆண்டு வரலாற்று ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அங்கு 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது வரலாறு ஆசிரியராக உள்ளார். தன்னுடைய பணியையும் கவனித்துக்கொண்டே 2016-ம் ஆண்டு முதல் யுபிஎஸ்ஸி தேர்வுக்குத் தயாராகி வந்திருக்கிறார். இன்று வெற்றி அவர் கைகளில். தன்னுடைய வெற்றிக்கு முக்கியக் காரணமாக ஆயுஷி கூறுவது, தன் குடும்பத்தைத்தான்.
ஆயுஷியின் தாய் ஆஷா ராணி அவரின் தேர்வு தயாரிப்புகளுக்கு உதவுவதற்காகவே 2020-ம் ஆண்டு தான் பார்த்த வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று உறுதுணையாக இருந்துள்ளார். வெற்றி குறித்து பகிரும் ஆயுஷி, “என்னுடைய பெயர் இறுதிப் பட்டியலில் இருக்கும் எனத் தெரியும். ஆனால் முதல் 50 இடங்களுக்குள் வருவேன் என நினைக்கவில்லை. இந்தச் சமூகத்தில் எங்கள் பங்கு அதிகம் வேண்டும்” என்றவர் யுபிஎஸ்சி தேர்வு எழுதியதற்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார்.
“என் ஆசிரியர் பணி பல மாணவர்களை வழிநடத்துவதற்கு உறுதுணையாக இருந்ததை உணர முடிந்தது. குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்று மக்களுக்கான பணியாற்றுவது பலர் வாழ்வை மாற்ற வாய்ப்பு தரும்’’ என்றிருக்கிறார் ஆயுஷி.