கூகுள் நிறுவனத்தின் வீடியோக்களுக்கான தளம் YouTube. இந்தத் தளத்தில் யார் வேண்டுமானாலும் வீடியோக்கள் அப்லோடு செய்யவும் பார்வையிடவும் முடியும். அதே நேரத்தில் ஸ்பேம் வீடியோக்கள், தவறாக வழிநடத்தக்கூடிய உள்ளடக்கம் கொண்ட வீடியோக்களை நீக்க YouTube சில விதிமுறைகள் கொண்டு வந்திருக்கிறது. Community Guidelines என்கிற பெயரிலான இவை, YouTube-ல் கிரியேட்டர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
இந்த விதிமுறைகளின் பெயரில் 2022 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் நீக்கிய வீடியோக்கள் மற்றும் சேனல்களின் விவரங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளது YouTube.
இந்தியாவிலிருந்து மட்டும் 11,75,859 வீடியோக்களை நீக்கியுள்ளதாக YouTube தெரிவிக்கிறது. இதுதான் உலகிலேயே அதிகபட்சமாம். அடுத்ததாக அமெரிக்காவிலிருந்து 3,58,134 வீடியோக்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.
Youtube-ன் மதிப்பீட்டாளர்கள், தானியங்கி அல்காரிதம் மற்ற இயந்திர நிரல்கள் வழியாக இந்த நீக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.
Harmful எனச் சொல்லப்படுகிற கன்டென்ட்டுகளான குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள், அதிதீவிர வன்முறை சார்ந்த வீடியோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
உலகம் முழுவதிலும் 44 லட்சம் சேனல்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. 90 நாள்களுக்குள் மூன்று முறை ஸ்ட்ரைக் செய்யப்பட்டிருந்த சேனல்களும், தவறாக வழிகாட்டும் கன்டென்ட் பதிவிட்டு ஒரேயொரு முறை ஸ்ட்ரைக் செய்யப்பட்ட சேனல்களும் இதில் அடக்கம். இந்த சேனல்களின் வீடியோக்களும் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டிருக்கின்றன.
ஆச்சரியம் தரக்கூடியது என்னவென்றால் நீக்கப்பட்ட 91 சதவிகித வீடியோக்கள் விதிகளை மீறியுள்ளது இயந்திர நிரலின் மூலமாகவே கண்டறியப்பட்டிருக்கிறது. 943 மில்லியன் கமென்ட்டுகளை YouTube நீக்கியுள்ளது. அதில் 99.3 சதவிகிதம் தானியங்கி முறையில் நீக்கப்பட்டுள்ளன.