வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: வங்கதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியாவில் இருக்கும் காதலனை சந்திக்க சட்ட விரோதமாக ஆற்றின் வழியாக நீந்தி வந்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
காதலுக்கு கண் இல்லை என்பார்கள். காதலிப்பவர்கள் தங்கள் காதலனோ, காதலியோ வேறு நாட்டில் இருந்தாலும் அவரை சந்திக்க நாடு கடந்து சந்திப்பது போல திரைப்படங்களில் பார்த்திருப்போம். இது போன்ற சம்பவங்கள் சில நிகழ்காலத்திலும் நடைபெற்றிருக்கும். ஆனால், வங்கதேசத்தை சேர்ந்த ஒரு பெண், சமூக வலைதளங்கள் மூலம் இந்தியாவை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து அவரை சந்திப்பதற்காக ஆற்றில் ஒரு மணிநேரம் நீந்தி வந்து காதலனை சந்தித்து திருமணமும் செய்துக்கொண்டுள்ள நிகழ்வு அரங்கேறியுள்ளது.
வங்கதேசத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் கிருஷ்ணா மண்டல். இவர் சமூக வலைதளத்தின் வாயிலாக கோல்கட்டாவை சேர்ந்த அபிக் மண்டல் என்ற வாலிபரை காதலித்துள்ளார். இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர். ஆனால், கிருஷ்ணா மண்டலிடம் பாஸ்போர்ட் இல்லாததால் இந்தியா வர முடியாமல் தவித்துள்ளார். காதலனை பார்க்க வேண்டும் என உறுதியாக இருந்த அவர், சுந்தரவனக்காட்டில் இருந்து ஆற்றில் சுமார் ஒரு மணிநேரம் நீந்தியே இந்தியா வந்து சேர்ந்துள்ளார்.
பின்னர் காதலனை சந்தித்து கடந்த 3 நாட்களுக்கு முன்பாக கோல்கட்டாவில் உள்ள கோவில் ஒன்றில் காதலர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். இருப்பினும், சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த காரணத்தினால் கிருஷ்ணா, போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் கிருஷ்ணா மண்டல், வங்கதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Advertisement