பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா மறைவுக்கு இன்னும் இரண்டு நாட்களில் விடை தெரியும் என்று மிரட்டல் தொனியில் சமூக வலைதளங்களில் பரவும் பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்த பதிவுகள் அனைத்துமே நீரஜ் பாவனா என்ற திகார் சிறைவாசியை டேக் செய்து பதிவிடப்பட்டுள்ளன. நீரஜ் பாவனாவின் கூட்டாளியான தில்லு தஜுப்ரியாவையும் டேக் செய்து இந்த எச்சரிக்கை பதிவுகள் பகிரப்பட்டுள்ளன.
இதனை யார் பதிவிட்டார்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் இந்த பதிவு டெல்லி, ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் வேகமாகப் பகிரப்படுகிறது. முன்னதாக புப்பி ரானா என்ற கேங்க்ஸ்டர் ஒருவரும் இதே மாதிரியான மிரட்டல் பதிவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார்.
சித்து மூஸ்வாலா கொலை செய்யப்பட்ட பின்னர் லாரன்ஸ் பிஷ்னோய் குழுவின் பேஸ்புக் பக்கத்தில் சித்துவின் படுகொலை இளைஞர் அகாலி தல தலைவர் விக்ரம்ஜித் சிங் படுகொலைக்கான பதிலடி என்று பதிவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இப்போது ட்ரெண்டாகும் புதிய பதிவுகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
சித்துவின் கொலையை தொடர்ந்து அங்கு நிறைய பழிவாங்கல் சம்பவங்கள் நடைபெறக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.
25 புல்லட்டுகள்: பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ் வாலா கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 29) படுகொலை செய்யப்பட்டார்.
சித்து மூஸ் வாலா பஞ்சாபில் மிகவும் பிரபலமான பாடகர். பஞ்சாப் தேர்தலுக்கு முன்பு காங்கிரசில் இணைந்தார். பிரபல பஞ்சாபி பாடகரும் ராப் பாடகருமான சித்து மூஸ் வாலா. அவருக்கு பணம் பறிக்கும் கும்பல்கள் பல தொடர்ந்து மிரட்டல் விடுத்துவந்தன. இந்நிலையில், காரில் சென்று கொண்டிருந்த சித்து மூஸ் வாலாவை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.
சித்துவின் உடலில் இருந்து 25 புல்லட்டுகள் எடுக்கப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.