கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் அரசு பழப் பண்ணையில் சீசன் தொடங்கியுள்ளதால், இலவ மரங்களில் இருந்து காய்களை தட்டி பஞ்சு சேகரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கல்லார் அரசு பழப் பண்ணை உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இப்பழப் பண்ணை இயற்கை எழில் மிகுந்த சூழலில் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் சீரான சீதோஷன நிலை நிலவும் இப்பண்ணையில் துரியன், மங்குஸ்தான், வெண்ணைப்பழம், ரம்புட்டான், வாட்டர் ஆப்பிள் என மிக அரிதாக விளையக் கூடிய பழவகை மரங்கள் உள்ளன.
மேலும், இங்கு 300-க்கும் மேற்பட்ட ‘சில்க் காட்டன் ட்ரீ’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இலவம் மரங்களும் உள்ளது. தற்போது இலவம் பஞ்சு சீசன் தொடங்கியுள்ளதால், உயர்ந்து வளரும் தன்மையுடைய இம்மரங்களில் உள்ள காய்கள் வெடித்து அதனுள் இருக்கும் இலவம் பஞ்சு வெளிவரத் தொடங்கியுள்ளது.
இதனையடுத்து மரங்களில் உள்ள பஞ்சு காய்களை தட்டி பறிக்கும் பணிகளும், உதிர்ந்து விழும் பஞ்சுகளை சேகரிக்கும் பணிகளும் பழப் பண்ணை ஊழியர்கள் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஏலம் விடப்படும்: இதுகுறித்து கல்லாறு பழப்பண்ணை நிர்வாகத்தினர் தரப்பில் கூறும்போது, ‘‘கடந்த இரண்டு நாட்களாக பஞ்சு காய்களை தட்டி பறிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊழியர்கள் மூலம் தினமும் சராசரியாக 15 முதல் 20 மரங்களில் இருந்து பஞ்சு காய்கள் பிரித்து எடுக்கப்படுகின்றன.
அடுத்த சில நாட்களுக்கு இப்பணி மேற்கொள்ளப்படும். மழைக்காலம் தொடங்கி விட்டால், நீரில் நனைந்து பஞ்சு வீணாகிவிடும் என்பதால் தற்போது பஞ்சுகளை எடுத்து அவற்றை பாதுகாப்பாக மூட்டை கட்டி வைக்கும் பணி முழு வேகத்தில் நடைபெறுகிறது. இவை மொத்தமாக சேகரிக்கப்பட்ட பின்னர் ஏலம் விடப்படும்.
இப்பஞ்சுகள் மெத்தை தலையணை மற்றும் மருத்துவ துறைக்கான தையல் நூல் தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இதன் விதைகளில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு சோப்பு தயாரிக்கவும், இதன் கழிவில் இருந்து கிடைக்கும் புண்ணாக்கு கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பித்தக்கது’’ என்றனர்.