கள்ள நோட்டு கும்பலை கட்டுப்படுத்த முடியல..புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் ரூ500 அச்சடிக்க முடிவு: ரிசர்வ் வங்கி அதிரடி

புதுடெல்லி :  கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்த கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய  ரூ.500 நோட்டுகளை அச்சிட  ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் எத்தனை பாதுகாப்பு அம்சங்களை புகுத்தினாலும், மாற்றங்களை கொண்டு வந்தாலும், அதேபோன்ற கள்ள நோட்டுகளை அச்சு அசலாக அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பல்கள் அதிகளவில் இருக்கின்றன. நாட்டின் பொருளாதாரத்தில் நிழல் அரசாங்கம் நடத்தி வரும்  இந்த கும்பல்கள், இதற்காக சர்வதேச அளவில் தொடர்புகளை வைத்துள்ளன. கடந்த 2016ல்  புதிதாக வெளியிடப்பட்ட ரூ.500,  ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகளையும்  இந்த கும்பல்கள் அதிகளவில் புழக்கத்தில் விட்டுள்ளன.  கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு கொண்டு வரும் போது, இதன் மூலம் கள்ளநோட்டுக்கள் முற்றிலும் ஒழியும் என்பது பிரதமர் மோடி கூறிய முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால், சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில், இது தலைகீழாக இருந்தது. அதாவது, நாட்டில் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக கூறியுள்ள ரிசர்வ் வங்கி, குறிப்பாக 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் 2 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 2021ம் ஆண்டு வங்கிகளால் கண்டுபிடிக்கப்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 39,453 ஆக இருந்தது. இது, 2022ம் ஆண்டில் இரு மடங்காக அதிகரித்து அதாவது, 101.9% உயர்ந்து 70,666 என்ற எண்ணிக்கையை தொட்டது. 2,000 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 8,798ல் இருந்து 54% உயர்ந்து 13,604 ஆக தொட்டுள்ளது. இதன் மூலம், பணமதிப்பிழப்பால் கருப்பு பணமும் ஒழியவில்லை, கள்ள நோட்டு பிரச்னையும் தீரவில்லை என பொருளாதார நிபுணர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கள்ள நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்தவே, தற்போது அதிகபட்ச மதிப்புள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்துள்ளது.  மேலும்,  கள்ள நோட்டுகளாக அச்சடிக்க முடியாத அளவுக்கு சிறப்பான பாதுகாப்பு அம்சங்களும், வடிவமைப்பும் கொண்ட புதிய ரூ.500  நோட்டுகளை அச்சிட்டு வெளியிடவும் அது முடிவு செய்துள்ளது. இதற்கு, அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிறுவனத்தின் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காகிதங்களும்,  மையும் பயன்படுத்தபட உள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ரூ.100, ரூ.200 நோட்டுகளிலும் புதிய பாதுகாப்பு அம்சங்களை ரிசர்வ் வங்கி புகுத்த உள்ளது.  நிறம் மாறாத மை, 3 வகையான பாதுகாப்பு இழைகள், நுண்துளைகள்,  சிறப்பு குறியீட்டு சொற்கள், நுண் இயற்பியல் மற்றும் ரசாயன குறியீடுகள் போன்றவை இதில் இடம் பெற  உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.