கார் மீது கண்டெய்னர் லாரி மோதல்: எம்.பி.,யின் உறவினர் உட்பட இருவர் பலி

புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று அதிகாலை கார் மீது கண்டெய்னர் லாரி மோதியதில், எம்.பி.,யின் உறவினர் உள்ளிட்ட இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.விழுப்புரம் மாவட்டம், வளவனுார் கிழக்கு பாண்டி ரோட்டை சேர்ந்தவர் குமார் (எ) முத்துகுமாரசாமி,55; அதே பகுதியில் பெரிய அளவில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன் மகளின் திருமணம் நேற்று, புதுச்சேரி இ.சி.ஆரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.அதில் பங்கேற்க முத்துக்குமாரசாமி நேற்று அதிகாலை 4:00 மணி அளவில், வளவனுாரில் இருந்து மாருதி ஸ்விப்ட் டிசையர் (பதிவெண்; பிஒய்-05-சி-0990) காரில் புதுச்சேரிக்கு புறப்பட்டார். அதே பகுதியை சேர்ந்த டிரைவர் முத்து,50; காரை ஓட்டி வந்தார்.


கண்டெய்னர் லாரி மோதல்

அதிகாலை 4:30 மணி அளவில் கார் புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே வந்து கொண்டிருந்தது.எதிரே புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற என்எல் 01-ஏஇ-2924 பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவே உள்ள முக்கால் அடி உயரமுள்ள தடுப்புக் கட்டை மீது ஏறி இறங்கியது.தொடர்ந்து, எதிரில் வந்த பைக்கை இடித்து தள்ளிவிட்டு, முத்துகுமாரசாமியின் கார் மீது மோதி, 10 அடி துாரத்திற்கு இழுத்துச் சென்றது. அப்போது, பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்த கார் மீது கண்டெய்னர் லாரி ஏறியதில், அப்பளமாக நொறுங்கியது.காரில் இருந்த முத்துகுமாரசாமி, டிரைவர் முத்து இடிபாடுகளில் சிக்கி, உயிருக்குப் போராடினர்.

மூவர் படுகாயம்
அப்பகுதி மக்கள் காரில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். கார் மீது கன்டெய்னர் லாரி ஏறி நின்றதால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல், போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.பைக்கில் இருந்து விழுந்து படுகாயமடைந்த வில்லியனுார் அடுத்த கீழூரை சேர்ந்த முருகன்,55; அவரது மனைவி தனலட்சுமி,50; மகன் கமலஹாசன்,23; ஆகியோரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருவர் உடல் மீட்பு
போக்குவரத்து சீனியர் எஸ்.பி., ராகுல் அல்வால், எஸ்.பி., மாறன் மற்றும் போலீசார், தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இரண்டு ராட்சத கிரேன்களை வரவழைத்து, ஒரு மணி நேரம் போராடி கண்டெய்னர் லாரியை அகற்றினர்.அப்பளம் போல் நொறுங்கிக் கிடந்த காரில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த முத்துகுமாரசாமி, முத்து ஆகியோரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எம்.பி.,யின் உறவினர்
இறந்த முத்துகுமாரசாமிக்கு, புஷ்பா என்ற மனைவி, லோகேஷ்,23; என்ற மகன் உள்ளனர்.டிரைவர் முத்துவுக்கு சத்யா என்ற மனைவி, கவுதம்,13; அஸ்வின்,10; என்ற மகன்கள் உள்ளனர்.இறந்த முத்துகுமாரசாமி, புதுச்சேரி ராஜ்யசபா எம்,பி., செல்வகணபதியின் நெருங்கிய உறவினர் ஆவார்.விபத்து குறித்து புதுச்சேரி வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்தனர். விபத்து ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி டிரைவர், உத்தரப்பிரதேசம், நொய்டாவை சேர்ந்த நுார்முகமது,35; என்பவரை பிடித்து விசாரித்தனர்.

விபத்து நடந்தது எப்படி
புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் உள்ள கம்பெனியில் இருந்து கொசு விரட்டிக்கான மூலப் பொருளை ஏற்றிக் கொண்டு நெட்டப்பாக்கத்தில் உள்ள கம்பெனிக்கு சென்று கொண்டிருந்தார்.ரெட்டியார்பாளையம் ஜெயா நகர் சந்திப்பு அருகே சாலையோரத்தில் இருந்த வாகை மரக்கிளை கண்டெய்னரில் இடித்தது. சத்தம் கேட்டு திடுக்கிட்டு லாரியை வலதுபக்கமாக திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவே உள்ள முக்கால் அடி உயர தடுப்புக்கட்டை மீது ஏறி இறங்கியது.அப்போது, எதிரே பைக் மற்றும் கார் வேகமாக வந்து கொண்டிருந்ததை பார்த்து, லாரியை இடது புறமாக திருப்ப முயல்வதற்குள், லாரி, எதிரே வந்த பைக் பக்கவாட்டில் மோதிவிட்டு, பின்னால் முத்துகுமாரசாமி வந்த கார் மீது மோதியது.

போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்தினால், புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

விபத்திற்கான காரணம்
புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை 50 அடி அகலம் உள்ளது. ஆனால், விபத்து நடந்த ரெட்டியார்பாளையம் ஜெயா நகர் சந்திப்பு பகுதியில் சாலை 25 அடியாக குறுகி உள்ளது. மேலும், இப்பகுதியில் சாலையின் நடுவே முக்கால் அடி உயர சிமென்ட் கட்டைகளை கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதனால், கண்டெய்னர் லாரி சாலை ஓரமாக சென்றபோது மரக்கிளை இடித்ததால், ஏற்பட்ட சத்தத்தால் டிரைவர் நிலை தடுமாறியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சாலை நடுவே வைத்துள்ள தடுப்பு கட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள பிரதிபலிப்பான்கள் மீது பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது. இதனால், சாலை நடுவில் தடுப்பு கட்டை இருப்பதும் தெரியாமல் உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.