தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் எண்ணற்ற பாடல்களைப் பாடிய பாடகர் கே.கே. இசை நிகழ்ச்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 53.
பிரபல பாலிவுட் பாடகர் கே.கே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் இரவு 10.30 மணியளவில் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் மாரடைப்பால் காலமாகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜிங்கிள்ஸ்-க்கு குரல் கொடுத்துள்ளார் கே.கே.
மகேஷ் பட் இயக்கிய ஜிசம் என்ற படம் அவருக்கு பாலிவுட் திரையுலகில் பரவலான கவனத்தை அளித்தது. தமிழ், இந்தி, தெலுங்கு மலையாளம் கன்னடம் மராத்தி உள்பட 11 மொழிகளில் ஏராளமான பாடல்களை அவர் பாடியுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் காதல் தேசம் படத்தில் கல்லூரி சாலை பாடல் மூலம் பிரபலமானார் கே.கே.
விஜய், அஜித், தனுஷ் உள்ளிட்டோரின் படங்களில் பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார் கே.கே.
சரத்குமார், விக்ரம் உள்ளிட்டோரின் படங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு கே.கே. குரல் கொடுத்துள்ளார்.
கேகே மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பலதரப்பட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்திய கே.கே. அனைத்து வயதினருக்கும் பிடித்தமான பாடகர் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் கே.கே. மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாடகர் கேகேயின் மரணம் இயற்கைக்கு மாறானது எனக் கொல்கத்தா நியூ மார்க்கெட் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. கேகேயின் மனைவி ஜோதி கிருஷ்ணா, மகன் நகுல், மகள் தாமரை ஆகியோர் டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு வந்து சேர்ந்தனர்.
உடல் அடையாளங்களைக் காட்டி ஒப்புதல் பெற்றதும் அரசு மருத்துவமனையில் கேகேயின் உடல் கூறாய்வு செய்யப்பட்டுக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.
கேகேயின் உடல் எடுத்துச் செல்லப்படும்போது கொல்கத்தா விமான நிலையத்தில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்கி மரியாதை செலுத்தப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதனிடையே கேகே தங்கியிருந்த ஓபராய் கிராண்ட் விடுதி அறையைப் பார்வையிட்ட கொல்கத்தா காவல் இணை ஆணையர், விடுதி நிர்வாகத்தினரிடம் விசாரணை மேற்கொண்டார்.