மேட்டூர்: காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்துள்ள நிலையில், மேட்டூர் அணை நீர் மட்டம் இரண்டு நாட்களில் ஓர் அடி சரிந்துள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை அளவை பொருத்து, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பதும், குறைவுதமாக இருந்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று (மே 31) வினாடிக்கு 2,770 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூன் 1) மேலும் சரிந்து 2,006 கனஅடியாக நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
கடந்த 30-ம் தேதி 117.02 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 116.59 அடியானது. இன்று மேலும் சரிந்து 116.12 அடியானது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் ஓர் அடி சரிந்துள்ளது.
தொடர்ந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவதை முன்னிட்டு, வரும் நாட்களில் அணை நீர் மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. அணையில் நீர் இருப்பு 87.41 டிஎம்சியாக உள்ளது.