லண்டன்:
கொரோனாவைத் தொடர்ந்து இப்போது குரங்கு அம்மை நோய் மக்களை மிரட்டி வருகிறது. குறிப்பாக பிரிட்டனில் இந்நோய் பாதிப்பு அதிகம் உள்ளது. பிரிட்டனில் நேற்று புதிதாக 71 பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுவரை 179 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவத்துள்ளது. உலக அளவில் 555 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.
கொரோனா போன்று குரங்கு அம்மையும், பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தும்போது மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது. எனவே, குரங்கு அம்மை நோய் பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து அந்தந்த நாடுகள் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன.
அவ்வகையில், பிரிட்டன் சுகாதாரத்துறை புதிய வழிநாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களும், பாதிப்பு அறிகுறி கொண்டவர்களும் உடலுறவு கொள்வதை தவிர்க்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புண்கள் குணமாகும் வரையிலோ அல்லது, உடலில் ஏற்பட்ட சிரங்குகள் காயும்வரையிலோ மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவேண்டும் என வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.