80 & 90ஸ் தமிழ் சினிமா `நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – `சின்ன வீடு’
இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.
டென்ட் கொட்டாய் டைரீஸ் – 80s, 90s Cinemas For 2K Kids
11 நவம்பர், 1985 அன்று வெளியான ‘சின்ன வீடு’, ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம். பாக்யராஜ் திரைப்படங்களின் வரிசையில் இன்னுமொரு வெற்றிப் பதக்கமாக இது இணைந்தது. ‘திரைக்கதை மன்னன்’ என்னும் பட்டப் பெயர் பாக்யராஜிற்கு உண்டு. அதை மெய்ப்பிக்கும் படி, இன்றைய தேதியில் பார்த்தாலும் கூட மிக சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிற அளவிற்குக் கோர்வையான, கச்சிதமான திரைக்கதையை தன்னுடைய பாணியில் எழுதி, இயக்கி சுவாரஸ்யப்படுத்தியிருந்தார் பாக்யராஜ்.
பொதுவாக பாக்யராஜின் திரைப்படங்களில் பாலியல் நகைச்சுவை நெடியுடன் கூடிய காட்சிகளும் வசனங்களும் நிறைய இருக்கும். இந்த சமாச்சாரம் ஆண்களைக் கவர்வதில் பெரிய ஆச்சரியமில்லை. அவர்களால் வெளிப்படையாக இதை ரசிக்க முடியும் என்பதுதான் நடைமுறை. ஆனால் பாக்யராஜின் படங்களுக்கு பெண் பார்வையாளர்களும் கூட்டம் கூட்டமாக அரங்கிற்கு வந்து ரசித்தார்கள் என்றால் அதுதான் அவர் உருவாக்கும் திரைக்கதையில் உள்ள மேஜிக். மிக விவகாரமான வசனம், காட்சி என்றாலும் கூட அதை தனது பிரத்யேகமான நகைச்சுவையாலும் நெகிழ வைக்கும் சென்ட்டிமென்ட்டாலும் இணைத்து மழுப்பிவிடும் அசாதாரண திறமை பாக்யராஜிற்கு உண்டு.
‘சின்ன வீடு’ திரைப்படத்தில் இருந்தே ஒரு காட்சியை இதற்காக உதாரணம் சொல்ல முடியும். ஒரு தம்பதியினர் பாலுறவு கொள்ளும் காட்சி ஒன்றின் பின்னணியில் பக்திப் பாடல் ஒலிக்கும். இந்தக் காட்சி சாதாரணமாகவோ, நேரடி ஆபாசமாகவோ கையாளப்பட்டிருந்தால், கலாசாரவாதிகளும் ஆன்மிகவாதிகளும் கடுமையாக எதிர்த்து படத்திற்கு தடை கோரும் படியான நிலைமை கூட ஆகியிருக்கக்கூடும். ஆனால் அத்தகைய விபத்து நேராதவாறு எடிட்டிங், சென்டிமென்ட், கதைப் பின்னணி போன்ற நுட்பங்களை உபயோகித்து காட்சிகளை மாற்றி மாற்றி அடுக்கி, ஆட்சேபம் தோன்றாத அளவிற்கு ஜாக்கிரதையாகக் கையாண்டிருப்பார் பாக்யராஜ். ‘சின்ன வீடு’ படத்தில் இது போல் ஏராளமான உதாரணங்கள் உண்டு.
கூடுதலாக பாக்யராஜின் அப்பாவித்தனமான முகமும் நடிப்பும் கூட இதற்கு ப்ளஸ் பாயிண்ட்டாக இருந்தது. வானத்தில் பறந்து சண்டையிடும் சூப்பர் ஹீரோக்களை விடவும் பக்கத்து வீட்டு வெள்ளந்தியான இளைஞனின் தோற்றத்தில் இருந்த பாக்யராஜை பெண்களுக்கு அதிகம் பிடித்திருப்பதில் ஓர் ஆதாரமான உளவியல் இருக்கிறது.
பாக்யராஜின் திரைக்கதை மேஜிக்
பொதுவாக நம் திரைப்பட இயக்குநர்களின் பேட்டிகளைக் கவனித்தால், ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் வரும் ஓஹோ புரொடக்ஷன்ஸ் செல்லப்பா மாதிரி (நாகேஷ்) “ஒரு கதை… அது மட்டும் கிடைச்சிட்டா ஷூட்டிங் போயிடுவேன்” என்று பெரிதாக அலட்டிக் கொள்வார்கள். கதைக்காக எங்குமே மெனக்கெட வேண்டியதில்லை என்பதுதான் உண்மை. நம் புராணங்களிலும் இதிகாசங்களிலும் தொன்மங்களிலும் நாட்டுப்புறங்களிலும் ஏராளமான கதைகள் உள்ளன. உலகில் இதுவரையான அனைத்துக் கதைகளுமே சொல்லப்பட்டு விட்டன. ஆனால் ஒரு கதையை ஒருவர் எப்படி சொல்கிறார், அவருடைய பாணியில் எப்படி கையாள்கிறார் என்பதில்தான் வித்தியாசமும் தனித்தன்மையும் அமைகிறது.
‘சின்ன வீடு’ திரைப்படத்தின் கதை என்பது அடிப்படையில் சிலப்பதிகாரத்தின் கண்ணகி – கோவலன் – மாதவி கதைதான். ‘பிறன் மனை நோக்குதல்’ என்கிற வகையில் இதுவரை ஏராளமான கதைகள் சொல்லப்பட்டு விட்டன. ஆனால் இதை ‘பாக்யராஜ்’ எப்படிச் சொல்லியிருக்கிறார் என்பதில்தான் ‘சின்ன வீடு’ திரைப்படத்தின் வெற்றி அமைந்தது.
‘சின்ன வீடு’ உருவாகிக் கொண்டிருந்த நேரத்தில், அதே மாதிரியான கதையமைப்பைக் கொண்ட ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ திரைப்படம் முன்னதாக வெளியாகியிருந்தது. எனவே ‘சின்ன வீடு’ திரைப்படத்தின் வெளியீட்டை சில காலத்திற்கு தள்ளி வைக்க நேர்ந்தது. இதெல்லாம் அப்போதைய காலகட்டத்தின் வணிகரீதியான காரணங்கள்.
ஆனால் இரண்டு திரைப்படங்களையும் இன்று ஒருசேர பார்க்க நேர்ந்தால், சில அடிப்படையான விஷயங்களில் ஒற்றுமை இருந்தாலும் கதையைக் கையாண்ட விதத்தில் இரண்டிற்கு கணிசமான வித்தியாசம் இருப்பதைப் பார்க்க முடியும். மணிவண்ணன் கையாண்ட முறைக்கும் பாக்யராஜ் கையாண்டதற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருந்தன. அவரவர்களின் தனித்தன்மை இருந்ததால்தான் இரண்டுமே வெற்றிப் படங்களாக அமைந்தன.
‘சின்ன வீடு’ திரைப்படத்தின் கதை என்ன?
தன்னுடைய வருங்கால மனைவி, சாமுத்திரிகா லட்சணங்களைக் கொண்ட அழகுப் பதுமையாக இருக்க வேண்டும் என்கிற கனவுடன் இருக்கிறான் மதனகோபால். (பாக்யராஜ்) ஆனால் ‘அவனுடைய பார்வையில்’, அவலட்சணமான, குண்டாக இருக்கும் பாக்யலஷ்மியை (கல்பனா – அறிமுகம்) திருமணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மனைவியை ஒதுக்கி வைத்து வேண்டா வெறுப்பாக குடும்பம் நடத்தும் மதன், பானு என்கிற ஓர் அழகான பெண்ணின் உறவில் சென்று விழுகிறான். (அனு). இதனால் ஏற்படும் உறவுச்சிக்கல்களும் குழப்பங்களும் இறுதியில் எவ்வாறு தீர்கின்றன என்பதை நிறைய காமெடியும் கொஞ்சம் சென்டிமென்ட்டும் இணைத்த கலவையில் சொல்லியிருக்கிறார் பாக்யராஜ்.
படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே சிவனின் தலையில் உள்ள கங்கையைக் காட்டி ‘நீயே வழிகாட்டி’ என்று சொல்லி சிவன் தலையில் கையை வைத்து அவர் மீது பழி போட்டு பூஜை போட்டு ஆரம்பிக்கிறார் இயக்குநர். திருமண மாப்பிள்ளை தப்பிச் சென்று ராணுவத்தில் இணைய முயலும் ரகளையான காட்சியுடன் படம் துவங்குகிறது.
பட்டுச்சட்டை, வேட்டியுடன் மாப்பிள்ளை கோலத்தில் ஒருவர் ஏன் ராணுவத்தில் சேர்வதற்கான க்யூவில் நிற்க வேண்டும் என்கிற குறுகுறுப்பான ஆர்வம் பார்வையாளனுக்கு ஏற்படுகிறது. இங்கேயே பாக்யராஜின் சேட்டைகளும் திரைக்கதை சாகசமும் ஆரம்பித்து விடுகின்றன.
ஒரு சிறிய பிளாஷ்பேக்கில் அதற்கான பின்னணி சொல்லப்படுகிறது. சாமுத்ரிகா சாத்திரப்படி நான்கு வகையாக உள்ள பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி ஆகியவற்றைக் கலவையாக கொண்ட ஒரு பெண்தான் தன்னுடைய மனைவியாக வரவேண்டும் என்று மதன் கனவு கண்டு கொண்டிருக்க, அதற்கு மாறாக உள்ள ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய நேர்கிறது. திருமண மண்டபத்தில் இருந்து தப்பித்து ராணுவத்தில் சேர வந்திருப்பவனுக்கு பார்வைக் குறைபாடு இருப்பதால் வெளியே துரத்தப்படுகிறான். வேறு வழியில்லாமல் தான் விரும்பாத பெண்ணை அவன் மணம் செய்ய வேண்டியிருக்கிறது.
மதனகோபால் – பாக்யலஷ்மி – பானு
மதனகோபால் என்கிற ‘சபலிஸ்ட்’ பாத்திரத்திற்கு மிக கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் பாக்யராஜ். தன்னுடைய இமேஜ் என்ன, எது தனக்கு நன்றாகப் பொருந்தும் என்பதைத் திட்டமிட்டு சரியாகத் தைக்கப்பட்ட ஆடை போன்ற பாத்திரத்தை தனக்காக உருவாக்கியிருக்கிறார். “எனக்கு இன்னமும் கல்யாணம் ஆகலை” என்று பார்க்கும் பெண்களிடம் எல்லாம் வழியும் மதன், ஆசை நாயகி தாலி கட்டச் சொல்லி வற்புறுத்தும் போது “சாரி… எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு” என்று தடுமாறியபடி சொல்லும் போது ஒரு பக்கம் சபலிஸ்ட்டாக இருந்தாலும், இன்னொரு பக்கம் மனசாட்சியுள்ள நபர் என்பதையும் சேர்த்தே சித்திரித்திருக்கிறார்.
ஸ்கூட்டர் வாங்கித் தரும் பணிவான மாமனாரிடம், “ஓகே… ஓகே… நானே பைக் வாங்கலாம்னு இருந்தேன். வேற கலரா இருந்தா நல்லாயிருக்கும்” என்று பந்தா காட்டுவது, சரளமான ஆங்கிலம் பேசும் மச்சானைப் பார்த்து மிரண்டு, “உன் தம்பி கேட்டா நான் எம்.காம் படிச்சிருக்கேன்னு சொல்லிடு” என்று பம்முவது, எதிர் வீட்டு பெண்ணை சைட் அடிக்கும் ஒரு நடுத்தர வயது ஆசாமியை தடுத்து நிறுத்தி “இதுக்கெல்லாம் இந்த ஏரியால நான் இருக்கேன்” என்று துரத்துவது, “தெரியாம தப்பு பண்ணிட்டேன் பாக்யம். என்னை மன்னிச்சிடு” என்று தூக்கத்தில் உளறுவது மாதிரி நடிப்பது, “முட்டையையும் முட்டைகோஸையும் கலந்து அவ செஞ்ச பொரியல் நல்லாயிருந்தது. அத எடுத்துட்டு வா” என்று சொல்லி அம்மாவின் திட்டை வாங்குவது, அப்பா வாங்கி வைத்திருந்த அல்வாவை எடுத்துத் தந்து மனைவியிடம் நல்ல பெயர் வாங்க முயல்வது… என்று விதம் விதமாக மதன் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன.
‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் அறிமுகமான ஊர்வசியின் அக்கா ‘கல்பனா’வை இந்தத் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தினார் பாக்யராஜ். ‘பாக்கியலட்சுமி’ என்கிற இந்தப் பாத்திரத்தில் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் கல்பனா. நண்பர்களின் முன்னால் தன் மனைவியை மறைப்பதற்காக சினிமா தியேட்டர் வாசலில் தயங்கி நிற்கும் கணவனிடம் “எனக்கு வேணா பொம்பளைங்க டிக்கெட் எடுத்துக் கொடுத்துடுங்க மாமா” என்று சொல்வது முதல் “நீங்க வேணா ஒரு சின்ன வீடு வெச்சுக்கங்க மாமா. ஆனா இன்னொரு குடியைக் கெடுக்காதீங்க” என்று கண்ணீர் விடுவது வரை ஒரு சராசரிப் பெண்ணின் மனநிலையை சிறப்பாகப் பிரதிபலித்திருந்தார்.
மதனகோபாலை தனது அழகால் மயக்கி பணம் பறிக்கும் பெண்ணாக அனு நடித்திருந்தார். இவர் ஏற்கெனவே சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படத்திற்குப் பிறகு ‘சின்ன வீடு அனு’ என்று அறியப்படும் அளவிற்கு புகழ் பெற்றார். தனது கவர்ச்சியான பாத்திரத்திற்கு ஏற்ற விஷயங்களை இவர் சரியாகவே செய்தார். பெண்ணைக் கட்டிக் கொடுத்துவிட்ட காரணத்திற்காகவே மருமகனிடம் பணிவாக இறங்கிச் செல்லும் பரிதாபமான மாமனாராக ஜெய்கணேஷ் சிறப்பாக நடித்திருந்தார். கல்பனாவின் தம்பியாக நடித்திருந்த சிறுவன், ஏற்கெனவே ‘சலங்கை ஒலி’ திரைப்படத்தில் ஒளிப்பதிவு உதவியாளனாக நடித்து அறியப்பட்டிருந்தான். இதிலும் இவனது நடிப்பு குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது. ஆங்கிலத்தில் பிளந்து கட்டி தன் அக்காள் கணவனை மிரள வைப்பதாகட்டும், அவரின் பின்னாலேயே சென்று குற்றங்களை அம்பலப்படுத்துவதாகட்டும்… அந்தச் சிறுவன் அசத்தியிருந்தான். இவர்தான் பிற்பாடு ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘பில்லா -2’ போன்ற படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி. ஹாலிவுட்டில் VFX தொடர்பாக நிறைய படித்திருந்தார்.
பாக்யராஜிற்கு அம்மாவாக, வயதான பாத்திரத்தில் நடித்திருந்த கோவை சரளா, இந்தச் சமயத்தில் டீன் ஏஜ் வயதில்தான் இருந்தார். என்றாலும் அந்த அடையாளமே தெரியாமல் “கோவாலு.. கோவாலு’ என்று மகனிடம் பாசம் காட்டும் அம்மாவாக நன்றாக நடித்திருந்தார். கண்டிப்பான தந்தையாக கே.கே.செளந்தர், அலுவலக உதவியாளராக காஜா ஷெரீப் போன்றவர்களும் நடித்திருந்தார்கள்.
தமிழ் சினிமாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர்
‘சின்ன வீடு’ திரைப்படத்திற்கு ஒரு தனித்த பெருமை உண்டு. இந்தத் திரைப்படத்தில்தான் தமிழில் முதன் முதலில் பெண் ஒளிப்பதிவாளர் அறிமுகப்படுத்தப்பட்டார். பொதுவாக ஒளிப்பதிவாளர் பணி என்பது சிரமமானதாகவும் ஆண்களால் மட்டுமே செய்யக்கூடிய பளுவைக் கொண்டதாகவும் கருதப்பட்டது. ஆனால் இந்த நடைமுறை கற்பனையை உடைத்தெறிந்து B.R.விஜயலஷ்மி ஒளிப்பதிவு பணியை மேற்கொண்டார். பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான பி.ஆர். பந்துலுவின் மகளான விஜயலஷ்மி, பிறகு பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தததோடு திரைப்படங்களையும் இயக்கினார். பெண் ஒளிப்பதிவாளரை அறிமுகப்படுத்தியதின் மூலம் பெண் குலத்தின் பெருமையை பதிவு செய்த பாக்யராஜ் பாராட்டுக்குரியவர்.
பொதுவாக இயக்குநரின் பெயரை டைட்டில் கார்டில் போடுவதுதான் தமிழ் சினிமாவின் மரபு. ஆனால் இந்த வழக்கத்தை மாற்றி, பார்வையாளன் ரசித்து கைத்தட்டி மகிழும் காட்சியில் இடும் ஒரு புதிய வழக்கத்தை பாக்யராஜ் உருவாக்கினார். பாக்யராஜின் திரைப்பட வெற்றிக்கு காரணமாக அவருடைய கதை விவாதக் குழுவையும் உதவியாளர்களையும் நிச்சயம் குறிப்பிட வேண்டும். அந்த வகையில் சஞ்சீவி, குமார், லிவிங்ஸ்டன், விஸ்வம் ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானது.
இணை இயக்குநராக பணியாற்றியதோடு வசனத்திலும் ரா.பார்த்திபனின் முக்கிய பங்கு இருந்தது. ஒரு சராசரி பார்வையாளன் சட்டென்று ஏற்றுக் கொள்ள முடியாத இடத்தைக் கூட தர்க்கத்துடன் கூடிய புத்திசாலித்தனமான வசனங்கள் ஏற்க வைத்தன. “நீங்க சின்ன வீடு வெச்சுக்கங்க” என்று எந்தவொரு மனைவியும் நிச்சயம் சொல்ல மாட்டார். ஆனால் இதில் சித்திரிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் லாஜிக்கோடும் சரியான சென்ட்டிமென்ட்டோடும் அமைக்கப்பட்டிருந்ததால் உறுத்தலாகத் தெரியவில்லை.
நாகுர்தனா… திரனனா… – சிக்னேச்சர் டியூன்
அது காமெடி படமோ, ஆக்ஷன் படமோ, இல்லை ரொமான்ஸ் படமோ தனது இசையை பாரபட்சமின்றி அள்ளி வழங்குவதில் இளையராஜா எவ்வித குறையும் வைக்க மாட்டார் என்பதற்கு ‘சின்ன வீடு’ திரைப்படமும் ஒரு சாட்சி. பாக்யராஜிற்கும் இளையராஜாவிற்கும் இடையே ஏற்கெனவே ஒரு சிறிய கருத்து வேறுபாடு இருந்தாலும் கூட இந்தப் படத்திற்கு மிகச் சிறந்த பாடல்களை வழங்கினார் ராஜா. இதற்குப் பிறகு பாக்யராஜ் இயக்கத்தில் ராஜா ஏனோ இசையமைக்கவில்லை. பாக்யராஜ் சுயமாக இசையமைப்பாளர் ஆனதெல்லாம் பிறகு நடந்தது.
‘அட மச்சமுள்ள’ பாடலில் வரும் ‘நாகுர்தனா… திரனனா…’ என்னும் ஒலிக்கோர்வை டி.வி.கோபாலகிருஷ்ணனால் பாடப்பட்டது. படம் பூராவும் நையாண்டி இசையாக வரும் இந்த ஒலிக்கோர்வை, பின்னர் வந்த பல திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டு பாலியல் நகைச்சுவைக்கான அடையாள இசையாகவே மாறிப்போனது. குறிப்பாக இயக்குநர் வெங்கட் பிரபுவின் படங்களில் இது பெரிதும் பயன்படுத்தப்பட்டது. ‘சிட்டுக்குருவி… வெட்கப்படுது’ என்னும் மிகச் சிறந்த பாடல், புஷ்பலதிகா ராகத்தில் இசையமைக்கப்பட்டது. Antonín Dvořák என்கிற இசை மேதை உருவாக்கிய சிம்ஃபொனி எண் 9-ன் தூண்டுதலும் இதன் பின்னணியில் உண்டு என்கிறார்கள்.
‘சிட்டுக்குருவி’ பாடல் தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான தகவலும் உள்ளது. இந்தச் சிக்கலான மெட்டுக்கு பாடல் வரி எழுதுவதென்பது அத்தனை எளிதான விஷயமாக இல்லை. இதர பாடலாசிரியர்கள் எத்தனை முயன்றும் சரியாக வராமல், வைரமுத்து வந்து எழுதித் தந்தார். ‘…தொட்டுப் பழக பழக, சொர்க்கம் வருது, கட்டித் தழுவ தழுவ, கட்டில் சுடுது, அந்தப்புரமே வரமே தருமே, முத்திரை ஒத்தடம் இட்டதும், நித்திரை வருமே’ என்று தத்தகாரத்திற்கு ஏற்ப பாடல் வரிகளில் பட்டையைக் கிளப்பியிருந்தார் வைரமுத்து. ‘வெள்ளை மனம் உள்ள மச்சான்’ என்கிற பாடல் ஒரு அருமையான மெலடியாக இருந்தது. ‘ஜாக்கிரத… ஜாக்கிரத’ பாடல் டைட்டில் கார்டில் உபதேச நோக்கில் ஜாலியாக பயன்படுத்தப்பட்டிருந்தது. ‘ஜாமம் ஆகிப் போச்சு’ மற்றும் ‘வா… வா… சாமி’ ஆகிய இரண்டு பாடல்களும் ஆல்பத்தில் இருந்தாலும் படத்தில் ஏனோ இடம் பெறவில்லை.
மதனகோபால் நல்லவனா, கெட்டவனா?
ஒரு சபலிஸ்டாக இருந்தாலும் ‘மதனகோபால்’ என்னும் கேரக்ட்டரை நாம் ரசிக்க முடிந்ததற்கு காரணம், பாக்யராஜ் இதை உருவாக்கியிருக்கும் விதம்தான். அழகான பெண்ணின் பின்னால் சுற்றுபவனாக இருந்தாலும் மனைவி மீது தன்னிச்சையான பாசம் உள்ளவனாகவும் மனசாட்சி உள்ளவனாகவும் அவன் இருந்ததால் பார்வையாளர்களின் கோபத்தைச் சம்பாதித்துக் கொள்ளவில்லை. அதே சமயத்தில் பாக்யலஷ்மி பாத்திரம் மிக வலிமையாக உருவாக்கப்பட்டிருந்தது. அதன் தரப்பு நியாயங்கள் அனைத்தும் சரியாகச் சொல்லப்பட்டிருந்ததால் சராசரி மனம் ஆசுவாசம் அடைந்திருக்கும். இந்தச் சமநிலையான கலவையை தனது திரைக்கதையில் மிகச் சரியாக உருவாக்கியிருந்தார் பாக்யராஜ்.
ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு துளி கூட சுவாரஸ்யம் குறையாத அளவிற்கான திரைக்கதை உருவாக்கப்பட்டிருந்தது. காட்சிகளில் வரும் சிறிய பொருள்கள் கூட கதையுடன் பின்னப்பட்டிருந்ததை ஒரு சிறப்பாகச் சொல்ல வேண்டும். சைடு கார் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்கூட்டரை மதனுக்கு மாமனார் பரிசளிப்பார். ஒரு கட்டத்தில் அதைக் கழற்றி மூலையில் போட்டு வைத்திருப்பான் மதனகோபால். “அதை மாதிரியே என் பொண்ணையும் மூலையில் போட்டுடாதே” என்று மாமனார் உருக்கமாக வேண்டுகோள் வைப்பார். இது போல் பல சென்டிமென்ட்டுகளை இணைத்து ‘பிறன் மனை தேடாதே’ என்கிற நீதியை விதம் விதமாகச் சொல்லியிருப்பார் பாக்யராஜ்.
படத்தில் ஆட்சேபகரமான விஷயங்களும் நிறைய இருக்கின்றன. அரசியல் சரித்தன்மையில் கறாராகப் பார்த்தால் நிறைய குறைகளைச் சுட்டிக் காட்ட முடியும். தன்னுடைய மனைவி குண்டானவர் என்று சுட்டிக் காட்டும் நோக்கில் மதனகோபால் தொடர்ந்து கிண்டல் செய்யும் வசனங்களிலும் காட்சிகளிலும் உருவ கேலி என்னும் ஆபத்தான விஷயம் இருந்தது.
இதைப் போலவே ‘பாக்யலஷ்மி’ என்னும் பாத்திரம் ‘கல்லானாலும் கணவன்’ என்கிற பழைமைவாதப் பெண்ணாக, அனைத்தையும் சகித்துக் கொண்டு செல்லும் பொறுமைசாலியாக சித்திரிக்கப்பட்டிருந்தார். ‘வெள்ளை மனம் கொண்ட மச்சான், வெளையாடி ஓய்ஞ்சு வந்தான்’ என்று கணவன் திருந்தி மனம் மாறி வரும் வரைக்கும் காத்திருப்பது போன்ற ஆதிகாலத்து சித்திரிப்புகள் வருகின்றன. இவை புராணப் பாத்திரத்திற்கு சரி. ஆனால் நவீன யுகத்திலும் ஒரு பெண் இத்தனை அவமதிப்புகளைத் தாங்கிக் கொண்டு திருமணம் என்னும் நிறுவனத்திற்குள் சிறைபட்டிருக்க வேண்டுமா என்கிற கேள்வி எழுகிறது.
‘இது அனுபவரீதியான கதை, எனக்கல்ல, நமக்கு?!’ என்று டைட்டில் கார்டில் ஜாக்கிரதையாக நீதி சொல்லியிருக்கிறார் பாக்யராஜ். பாலியல் நகைச்சுவை, பாலியல் காட்சிகள், உருவ கேலி, பழைமைவாத பெண்ணின் சித்திரம் போன்ற சில குறைகள் இருந்தாலும் ‘புற அழகைவிடவும் அக அழகு கொண்ட பெண்தான் ஒருவனுக்கு உண்மையான துணையாக இருக்க முடியும்’ என்கிற அழகான செய்தியை சுவாரஸ்யமாகச் சொன்ன விதத்திற்காக ‘சின்ன வீடு’ திரைப்படம் குறிப்பிடத்தக்க சினிமாவாக கொண்டாடப்பட வேண்டியதொன்று.