சீன லைட்டர்களுக்கு தடை விதித்து தீப்பெட்டித் தொழிலைப் பாதுகாக்க  வேண்டும் – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை.!

மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ‘‘மேக் இன் இந்தியா” திட்டத்தின் மூலம் இந்திய உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கவேண்டும் என்று மத்திய அரசு கூறிவந்தாலும், தமிழகத்தின் தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் தீப்பெட்டி உற்பத்தி விவகாரத்தில் “மேக் இன் இந்தியா” மெளனமாகி நிற்பதை கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.

ஒருபக்கத்தில் தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வு; மறுபக்கத்தில் ஜி.எஸ்.டி. வரிப்பிரச்னை என்று அணைந்து போகிக்கொண்டிருந்த தீப்பெட்டி உற்பத்திக்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்கள் பெருஞ்சிக்கலை ஏற்படுத்தி தொழிலை முடக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது.  

சீனப் பட்டாசுகளுக்கு தடை இருப்பது போல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்களுக்கு முழுமையான தடையில்லை. பயன்படுத்துவதற்குத் தயார் நிலையில் உள்ள (finished product) சீன லைட்டர்களை இறக்குமதி  செய்யத்தடை உள்ளது என்றாலும், பகுதியளவு முடிக்கப்பட்ட தயாரிப்பு (Semi finished product) என்ற வழிமுறையில் சீன லைட்டர்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. 

உண்மையில் இந்த லைட்டர்கள் எரியக்கூடிய திரவத்துடன், பயன்படுத்துவதற்கு முழுவதும் தயார் நிலையில் உள்ள லைட்டர்களாகவே இறக்குமதி செய்யப்பட்டு சந்தையில் நேரடியாக விநியோகிக்கப்படுகிறது என்பதே தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் குற்றச்சாட்டு.

இந்த வகையிலான லைட்டர் இறக்குமதியின் மூலம் அரசாங்கத்திற்கு பலகோடிகள் வரி இழப்பு ஏற்படுகிறது என்று உற்பத்தியாளர்கள் மத்திய அரசுக்கு மனு அனுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சூழலியல் நோக்கில் பார்த்தாலும், தீப்பெட்டியின் பெரும்பான்மைப் பகுதிகள் மக்கக்கூடியவை. 

ஆனால் லைட்டர்களைப் பயன்படுத்திவிட்டு வீசியெறிவது மக்காத குப்பையைக் பெருக்குவதற்கே வழிவகுக்கும். இலட்சக்கணக்கான தொழிலாளர்கள், குறிப்பாக பெண் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் உள்ளூர் தொழில் முனைவோரைப் பாதிக்கும் இவ்விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து முடிவெடுத்து சீனலைட்டர்களுக்குத் தடைவிதிக்க வேண்டும்.  

தீப்பெட்டி உற்பத்தியெனும் ‘‘மேக் இன் தமிழ்நாடு” பிரச்னைக்கு மத்திய அரசு விரைவில் தீர்வுகாண வேண்டும். மாநில அரசும் இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்கவேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.