`சேர்ந்து வாழ விரும்பினால் வாழலாம்!’ – குடும்பங்கள் பிரித்த தன்பாலின ஈர்ப்பாளர்களை இணைத்த நீதிமன்றம்

குடும்பங்கள் பிரிக்க நினைத்த தன்பாலின ஈர்ப்பாளர் ஜோடியை உயர் நீதிமன்றம் சேர்த்துவைத்துள்ள சம்பவம் கேரள மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. கேரளத்தைச் சேர்ந்த அடிலா, நூரா இருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்கள். 20 வயதின் தொடக்கத்தில் இருக்கும் இவர்கள் சில ஆண்டுகளாகவே ஒருவரை ஒருவர் விரும்பினர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இருவரும் தங்கள் பெற்றோரிடம் இந்த விஷயத்தைத் தெரிவித்தனர். குடும்பத்தினர் இதற்கு மறுப்பு தெரிவிக்கவே இருவரும் தங்கள் வீட்டைவிட்டு வெளியேறி சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்காகப் பணியாற்றும் ’வனஜா கலெக்டிவ்’ என்ற அமைப்பிடம் தஞ்சம் புகுந்தனர்.

தன் பாலின ஈர்ப்பாளர்கள்

விஷயத்தைக் கேள்விப்பட்ட இரு குடும்பத்தினரும் அன்றைய தினம் இரவே அங்கு சென்று தங்கள் மகள்களை தங்களுடன் வருமாறு மூளைச் சலலை செய்தனர். அவர்களுடன் செல்வதற்கு நூரா உறுதியாக மறுத்துவிட்டார். ஆனால் அடிலாவின் பெற்றோர் இருவரையும் தங்களுடன் அழைத்துச் செல்வதாகவும், நூராவை தன் மகள்போல் பார்த்துக்கொள்வதாகவும் உறுதியளித்து இருவரையும் அழைத்துச் சென்று எர்ணாகுளத்திலுள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்தனர். அங்கு சென்ற பிறகு இருவரிடமும் உணர்வுபூர்வமாக பேசி அவர்களை பிரிந்துவிடும்படி அழுத்தம் கொடுத்துள்ளனர். நெருக்கமாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக இருவரும் ஒரே அறையில் உறங்குவதற்கும் அனுமதி மறுத்துள்ளனர்.

இதனையடுத்து நூராவின் பெற்றோர் தன் மகளைக் காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அடிலா, நூரா இருவரையும் காவல் நிலையத்துக்கு வரவழைத்த போலீஸார், இருவரும் 20 வயதை எட்டிவிட்டதால் (Adult) இந்த விவகாரத்தில் இவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என்று தெரிவித்துவிட்டனர். மீண்டும் அடிலாவின் உறவினர் வீட்டுக்கே இருவரும் திரும்பினர். இதனையடுத்து அடிலாவின் பெற்றோர், பாட்டி, தாத்தா, உறவினர்கள் அனைவரும் நூராவை வீட்டிலிருந்து கட்டாயப்படுத்தி, இழுத்து வெளியேற்றியுள்ளனர். நூராவின் பெற்றோர் சம்பவ இடத்துக்கு வந்து அவரை அழைத்துக்கொண்டு சென்றனர்.

தன்பாலின ஈர்ப்பு

இதுபற்றிப் பேசியுள்ள அடிலாவின் தோழி ஒருவர், ’நூராவின் உறவினர் ஒருவர், ஓர் ஆணிடமிருந்து பெறும் இன்பத்தை அனுபவித்துவிட்டாலே இதெல்லாம் தானாகவே மாறிவிடும் என்று கூறி நூராவைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர்’ என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து ’வனஜா கலெக்டிவ்’ அமைப்பு, மற்றும் அடிலா இருவரும் காவல் நிலையத்தில் புகாரளித்தபோது, இது இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால் தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நூராவுக்கு தன்பாலின ஈர்ப்பிலிருந்து மாறுவதற்கான Conversion Therapy-யை ஓர் உளவியல் ஆலோசகர் மூலம் பெற்றோர் அளித்துள்ளனர்.

Conversion Therapy என்பது ஒருவருடைய பாலியல் நோக்குநிலை அல்லது பாலினத்தை மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டும் அறிவியல்பூர்மற்ற செயல்முறையாகும். இதனை சென்னை உயர் நீதிமன்றம் தடைசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மே 30-ம் தேதி கேரள உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார் அடிலா. இதன் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் ஆஜரானார் நூரா. நூரா, அடிலா ஜோடியைத் தவிர வேறு யாரும் வழக்கு நடைபெறும் இடத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.

குடும்பங்கள் பிரித்த தன்பாலின ஈர்ப்பாளர்களை இணைத்த நீதிமன்றம்

‘இருவரும் ஒன்றாக வாழ விரும்பமா?’ என்று நீதிபதி எழுப்பிய கேள்விக்கு இருவரும் ‘ஆம்’ என்ற பதிலைத் தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணை தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில், ’உரிய வயதில் இருக்கும் இருவரும் இணைந்து வாழ விரும்பினால், வாழலாம்!’ என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம். குடும்பங்கள் பிரிக்க நினைத்தவர்களை உயர் நீதிமன்றம் சேர்த்து வைத்துள்ள நிகழ்வுக்கு பல தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.