சோனியா, ராகுலுக்கு அமலாக்கத் துறை சம்மன்!| Dinamalar

‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை பங்கு பரிவர்த்தனை முறைகேடு தொடர்பான வழக்கில்
ஆஜராகும்படி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா மற்றும் அவரது மகன் ராகுல் ஆகியோருக்கு, அமலாக்கத்துறை மீண்டும் ‘சம்மன்’ அனுப்பியுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது
.

முன்னாள் பிரதமர் நேருவால் துவக்கப்பட்ட ‘அசோசியேட்டட் ஜர்னல்’ என்ற நிறுவனத்தின் சார்பில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியாகி வந்தது. இந்நிறுவனத்திற்கு, 90 கோடியே 25 லட்ச ரூபாய், காங்., கட்சி கடனாக வழங்கியிருந்தது.

நலிவடைந்திருந்த பத்திரிகையை மீட்பதற்காக இந்தக் கடன் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தாலும், ஒரு கட்டத்தில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அச்சிட்டு, வெளியிடுவது நிறுத்தப்பட்டது.இந்நிலையில், 2010ல், அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனத்தின் பங்குகள், ‘யங் இந்தியா’ என்ற நிறுவனத்திற்கு மாற்றம் செய்யப்பட்டன. வெறும், 50 லட்சம் ரூபாய் கொடுத்து, இந்நிறுவனத்தின் பங்குகள் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. யங் இந்தியா நிறுவனத்தின் பங்குதாரர்களான சோனியா மற்றும் ராகுலிடம், 76 சதவீத பங்குகள் உள்ளன.இந்தப் பங்கு பரிவர்த்தனையில், முறைகேடு நடந்திருப்பதாக கூறி, டில்லி நீதிமன்றத்தில் பா.ஜ., மூத்தத் தலைவரான சுப்ரமணியன் சுவாமி, 2013ல் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து, வருமான வரித் துறை விசாரணை நடத்தி, டில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதன் அடிப்படையில்,அசோசியேட்டட் ஜர்னல் மற்றும் யங் இந்தியா நிறுவனங்களிடையே, நடந்த நிதி பரிமாற்றங்கள் குறித்தும், இதில் காங்., நிர்வாகிகளின் பங்கு குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணைக்காக ஏப்ரலில், மூத்த தலைவரும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவும், காங்., பொருளாளர் பவன்குமார் பன்சலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இவர்களது வாக்குமூலங்கள், சட்டவிரோத பங்கு பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையால் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த விவகாரம் மீண்டும் கிளம்பியுள்ளது.காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா மற்றும் அவரது மகனும் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் ஆகியோருக்கு, மத்திய அமலாக்கத் துறை அதிரடியாக சம்மன் அனுப்பியுள்ளது. இதில், வரும் 8ம் தேதி ஆஜராகும்படி சோனியாவுக்கும்,

அதற்கு முன்பாக ஆஜராகும்படி ராகுலுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், காங்., கடும் கோபம் அடைந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த 48 மணி நேரத்திற்கு முன்பாகவே, அமலாக்கத் துறை சார்பில், சோனியாவுக்கும், ராகுலுக்கும் சம்மன் வழங்கப்பட்டு விட்டது. ராகுலைத்தான் உடனடியாக ஆஜராகும்படி கேட்கப்பட்டது. இதன்படி, இன்றோ அல்லது நாளையோ அவர் ஆஜராக வேண்டும்.
வெளிநாட்டில் இருப்பதால், 5ம் தேதிக்குப் பிறகு, ஏதாவது ஒரு தேதி வழங்கும்படி, ராகுல் அலுவலகத்தில் இருந்து, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒப்புக் கொண்டனர்!

குற்றவாளி என்றைக்காவது, தான் குற்றவாளி என்பதை ஒப்புக் கொண்டதை பார்த்திருக்கிறோமா? அதுபோல, சோனியாவும் ராகுலும், தாங்கள் குற்றமற்றவர்கள் என்றுதான் கூறுவர். ஆவணங்கள் கச்சிதமாக உள்ளன. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால், அதை ரத்து செய்ய, கோர்ட்டில் முறையிட வேண்டும். ஆனால், இவர்களோ ஜாமின் கேட்டு கோர்ட்டை நாடுகின்றனர். இதன் அர்த்தம், அவர்கள் குற்றவாளிகள் என்பதே.ஜே.பி.நட்டாதேசிய தலைவர், பா.ஜ.,

பழிவாங்கும் நடவடிக்கை

காங்., செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, நேற்று டில்லியில் கூறியதாவது :
நாட்டின் விடுதலைக்கு பாடுபடாத கட்சியான பா.ஜ., தற்போது நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை வைத்து, சுதந்திர போராட்டம் நடத்தி, விடுதலைக்காக போராடிய தியாகிகளை அவமரியாதை செய்யத் துணிந்துவிட்டது.பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ஒடுக்கப்பட்டது. இப்போது, அதே போன்ற ஒடுக்குமுறையை, மோடி அரசு செய்கிறது. இது முழுக்க, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு மூத்த தலைவரான அபிஷேக் சிங்வி கூறியதாவது :

கடந்த 2015லேயே, இந்த நேஷனல் ஹெரால்டு வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், தற்போது பண பரிவர்த்தனை மோசடி நடந்திருப்பதாக கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது. உண்மையில், அது போன்ற குற்றம் ஏதும் நடைபெறவில்லை.கடந்த 2015க்கு பிறகு, அமலாக்கத் துறையில், சில அதிகாரிகளை மத்திய அரசு மாற்றி, புதிய அதிகாரிகள் மூலமாக, தற்போது சம்மன் அனுப்பியுள்ளனர். இதற்கெல்லாம் காங்., அஞ்சப் போவதில்லை. முழுபலத்துடன், இந்த விவகாரத்தை எதிர்கொள்வோம். வரும் 8ம் தேதி, டில்லியில் ராகுல் இருந்தால் ஆஜராவார். இல்லையெனில், கூடுதல் கால அவகாசம் கேட்டு, கடிதம் எழுதப்படும்.இவ்வாறு அவர் கூறினார். – நமது டில்லி நிருபர் –

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.