சென்னை: தமிழகத்தில் ‘தட்கல்’ முறையில் பத்திரப்பதிவு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்த “தட்கல்” பத்திரப்பதிவு முறை செயல்படுத்தப்படவுள்ளது.
தமிழக சட்டப் பேரைவைக் கூட்டத்தொடரின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பத்திரப்பதிவை விரைந்து மேற்கொள்ள வசதியாக ‘தட்கல்’ முறை கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பத்திரப்பதிவு துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அரசாணையில், “தட்கல் பத்திரப்பதிவு நடைமுறை முதற்கட்டமாக 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் செயல்படுத்தப்படும்.
தினசரி அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த 100 சார் பதிவாளர் அலுவலகங்களிலும், அதிகபட்சமாக தினசரி தலா 10 தட்கல் பத்திரப்பதிவுகள் செய்யப்படும்.
தட்கல் முறையில் பத்திரப்பதிவு செய்ய ரூ.5 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.