தமிழகம் முழுவதும் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் மாதா நவநாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே மேலக்கோவில்பட்டி புனித சவேரியார் ஆலயம் சார்பில் நடந்த மாதா நவநாள் நிகழ்ச்சியில் மாதா எலிசபெத்தம்மாளை சந்திக்கும் விழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது.
வத்தலகுண்டு அருகே 250 குடும்பங்களைக் கொண்ட மேலக்கோவில்பட்டியில் வீட்டிற்கு ஒருவர் அல்லது இருவர் ராணுவத்தில் பணியாற்றி வருவதால் இந்தக் கிராமமே ராணுவ கிராமம் என அழைக்கப்படுகிறது. ராணுவம் மட்டுமில்லாது விமானப்படை, கப்பல்படையிலும் இப்பகுதியைச் சேர்ந்தவர் பணியாற்று வருகின்றனர்.
1949-ம் ஆண்டு இந்தப் பகுதியில் புனித சவேரியார் ஆலயம் அமைக்கப்பட்டது. இதையடுத்து 1962-ல் புதுப்பிக்கப்பட்டது. கடந்த 2018-ல் இந்த தேவாலயம் வத்தலகுண்டு பகுதி திருச்சபை பங்கில் இருந்து பிரிந்து புதிதாக மேலக்கோவில்பட்டி பங்காக உயர்வு பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆலயத்தில் மே மாதத்தில் மாதா வழிபாடு வெகு சிறப்பாக நடைபெறும். மேலக்கோவில்பட்டி கிராம மக்கள் மட்டுமில்லாது சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவ மக்களும் மே மாதம் முழுவதும் விரதம் மேற்கொள்வர். குறிப்பாக கைதூக்கு சப்பரத்தை சுமப்பதாக வேண்டி கொண்ட மக்கள் கடுமையான விரத்தைப் பின்பற்றுவார்கள்.
ராணுவ கிராமமான மேலக்கோவில்பட்டியில் நாட்டில் ஒற்றுமை நிலவவும், தேசத்திற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து, நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ பணியில் ஈடுபட்டிருக்கும் தங்கள் உறவினர்கள் நலன் வேண்டியும் கைதூக்கு சப்பரத்தை சுமந்து வந்து தங்கள் நேர்த்தி கடனைச் செலுத்துவர்.
அதேபோல் மே 31 (நேற்று) இரவு மாலை 6 மணிக்கு புனித சவேரியார் ஆலயத்தில் சிறப்பு பூஜை தொடங்கியது. இதையடுத்து பங்குதந்தை ஜெயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி ஆராதனைகள் நடைபெற்று, எல்லோருக்கும் ஆசி வழங்கப்பட்டது. இதையடுத்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மாதா சப்பரத்தை ஆலயத்தில் இருந்து இளைஞர்கள் தூக்கி கொண்டு பங்கு தந்தையின் இல்லத்துக்கு எடுத்துச் சென்றனர். அங்கு பங்கு தந்தை ஏற்பாடு செய்திருந்த விருந்தில் அனைத்துத்தரப்பு மக்களும் பங்கேற்றனர்.
இதையடுத்து அந்த சப்பரம் பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சப்பரம் தூக்குவதாக வேண்டி கொண்ட ஒவ்வொரு பகுதிகளைச் சேர்ந்த பெண்களும் மாறிமாறி சப்பரத்தைத் தூக்கி சென்றனர். சப்பரத்தில் செல்லும் மாதா ஒவ்வொரு வீதியாக வீடு வாசல் வரை சென்று மக்களை ஆசிர்வதித்தார்.
இவ்வாறு இரவு முழுவதும் மேற்கு தெரு, கிழக்கு தெரு, நடுத்தெரு, தெற்கு தெரு பகுதிகளுக்கு சென்ற சப்பரம் இன்று அதிகாலை 4 மணியளவில் புனித சவேரியார் ஆலயத்தை அடைந்தது. இவ்விழாவில் மேலக் கோவில்பட்டி, சின்னுபட்டி, மரியாயி பட்டி, வத்தலக்குண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் கிறிஸ்தவ பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.