நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை 103 சதவீதமாக இருக்கும்! இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை ஏற்கனவே கணித்ததை விட கூடுதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 103 சதவீதமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் தென்மேற்கு பருவமழையானது ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் நிறைவடைகிறது. இந்த 4 மாதங்களில் பெய்யும் மழையைத்தான் இந்திய விவசாயிகள் பிரதானமாக நம்பியிருக்கின்றனர். இந்நிலையில், அந்தமான் நிகோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை ஒரு வாரத்திற்கு முன்பே,  முன்கூட்டியே தொடங்கிவிட்டது. கேரளாவில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில்  ஜூன் 1-ந்தேதி (இன்று) தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குனர் மிருத்யுசூசய் மொகபத்ரா,  தற்போதைய தென் மேற்கு பருவ மழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) சராசரி மழை பொழிவு 103 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரீஃப் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் அதிகம் உள்ள மைய மழை சார்ந்த பகுதிகளில் பருவமழை 106% LPA ஆக இருக்கும்.
கடந்த மாதம் பருவ மழை பொழிவு 99 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கூடுதல் பருவ மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்யும் என கூறினார்.

கடந்த ஆண்டு பருவ மழை 99 சதவீதம் (இயல்பு) இருந்தது. 2020-ல் இயல்புக்கு அதிகமாக 109 சதவீதமும், 2019-ல் பருவ மழை இயல்புக்கு அதிகமாக 110 சதவீதமும் இருந்தது. தற்போதைய பருவ மழை இந்தியாவிலும், தென் தீபகற்பத்திலும் இயல்பை விட அதிகமாக 106 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் 96 முதல் 106 சதவீதம் வரையும் இருக்கலாம் என கணிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.