காத்மாண்டு: விபத்துக்குள்ளான நேபாள விமானத்தின் கருப்புப் பெட்டி நேற்று கண்டெடுக்கப்பட்டது.
நேபாள நாட்டிலுள்ள தாரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ட்வின் ஓட்டா் 9 என்-ஏஇடி’ என்ற சிறிய ரக விமானம் பொக்காராவிலிருந்து மத்திய நேபாளத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான ஜோம்சோம் நோக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9.55 மணிக்குப் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில், தரைக் கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விமானத்தைத் தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில் அன்று மாலை விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. கடல் மட்டத்திலிருந்து 14,500 அடி உயரத்தில் அமைந்துள்ள முஸ்டாங் மாவட்டம் தசாங்-2 என்ற மலையடிவாரப் பகுதியில் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டது.
இந்த விமானத்தில் பயணம் செய்த 4 இந்தியர்கள் உள்பட 22 பேரும் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 21 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன. இந்நிலையில் நேற்று காலை 22-வது நபரின் உடலும் மீட்கப்பட்டது.
மேலும் விமானத்தின் கருப்புப் பெட்டியையும் மீட்புப் படை வீரர்கள் கண்டெடுத்தனர். இந்தப் பெட்டி ஆய்வு செய்யும்போது விமான விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து விமானத்தின் கருப்புப் பெட்டி காத்மாண்டுவுக்கு கொண்டுசெல்லப்பட்டது.
மோசமான வானிலை காரணம்
இதனிடையே மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று நேபாள விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பாக விசாரிக்க மூத்த ஏரோ நாட்டிக்கல் இன்ஜினீயர் ரதீஷ் சந்திர லால் சுமன் தலைமையில் 5 பேர் கொண்ட விசாரணை ஆணையத்தை நேபாள அரசு அமைத்துள்ளது.