புதுடில்லி: நேஷனல் ஹெரால்டு நாளிதழ் குறித்த பணமோசடி வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் அவரது மகன் ராகுலுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளது. வரும் 8 ம் தேதி ஆஜராகும்படி சோனியாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
‘யங் இந்தியா’ டில்லியை தலைமை இடமாக வைத்து செயல்படும், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, ‘யங் இந்தியா’ என்ற அமைப்பு, 2010ல் விலைக்கு வாங்கியது. காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல் உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ள இந்த அமைப்பு, பத்திரிகையை வாங்கியதில் மோசடி நடந்துள்ளதாக, பா.ஜ.,வைச் சேர்ந்த மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், சோனியா மற்றும் ராகுல் ஆகியோரை நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். வரும் 8 ம் தேதி ஆஜராக சோனியாவுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதற்கு முன்னர், ஆஜராக வேண்டும் என ராகுலுக்கும் உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக அக்கட்சியின் அபிசேக் சிங்வி கூறுகையில், சோனியா 8 ம் தேதி ஆஜராவார். ராகுல், இங்கு இருந்தால், அன்றைய தினம் நேரில் ஆஜர் ஆவார். இல்லை என்றால் வேறு தேதி கேட்டு கோரிக்கை வைப்பார் எனக்கூறினார்.
இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், பழைய வழக்கில், சோனியா மற்றும் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. பணமோசடி நடந்ததாக கூறப்படுவதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Advertisement