காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ராகுல் காந்தி ஜூன் 2 ஆம் தேதியும், சோனியா காந்தி ஜூன் 8 ஆம் தேதியும் ஆஜராகும்படி நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 5 ஆம் தேதிக்குப் பின்னர் தான் வெளிநாடு செல்வதால் கால அவகாசம் வேண்டும் என்று கோரியுள்ளார்.
எதற்காக சம்மன்: அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏஜெஎல்) சுதந்திரத்துக்கு முன்பு ஜவஹர்லால் நேரு தொடங்கினார். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர்.
இதன் சார்பில் நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாயின. இந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் கொடுத்துள்ளது. இதை திருப்பிச் செலுத்தாத நிலையில், நஷ்டம் காரணமாக 2008-ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, 2010-ம் ஆண்டு இந்நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ.50 லட்சத்துக்கு யங்இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கு ஏஜேஎல் நிறுவன பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறவில்லை.
இந்நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் வசமும் 24 சதவீத பங்குகள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் வசமும் வந்தன. 2016 முதல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீண்டும் வெளியாகிறது. இதனிடையே, ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை மாற்றிய தில் முறைகேடு நடந்ததாகக் கூறி அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னதாக இவ்வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் ஆகியோரிடம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கை பாஜக எம்.பி. சுப்பிரமணி சுவாமி தான் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கண்டனம்: இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், நேஷனல் ஹெரால்டு பங்கு மாற்றத்தில் எவ்வித பண மோசடியும், பணப் பரிவர்த்தனையும் நடைபெற்றதாக ஆதாரம் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, சில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெறுவதைப் பயன்படுத்தியும் பழிவாங்கல் நடவடிக்கையாக இதைச் செய்கின்றனர்.
இது தரம் தாழ்ந்த அரசியல். சிறுமையானவர்கள் செய்யும் அரசியல் என்று சாடியுள்ளார். மேலும், நாட்டில் பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே இது நடத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.