பறிக்கிறத விட தப்பி ஓடுறதுல கூடுதல் வேகம்.. 6.6 கிலோ தங்க நகை அபேஸ்..!

தஞ்சையில் நகை வியாபாரிடம் இருந்து 6 கிலோ 600 கிராம் தங்க நகைகள் மற்றும் 14 லட்சம் ரூபாய் ரொக்க பணம் இருந்த பையை 9 பேர் கொண்ட ஒயிட்காலர் கிரிமினல்ஸ் பறித்து சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது

தஞ்சையை சேர்ந்த மணி என்பவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். இவர் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள நகை கடைகளில் ஆர்டர் எடுத்து சென்னையில் இருந்து மொத்தமாக தங்க நகைகளை வாங்கி வந்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்

31ம் தேதி இரவு தஞ்சையில் உள்ள நகை கடைகளில் ஆர்டர் எடுத்த நகைகளை கொடுப்பதற்காக கருப்பு நிற பேக்கில் நகை மற்றும் பணத்தை எடுத்து வந்துள்ளார்.

இவரை வெள்ளை சட்டை அணிந்து வந்த 9 பேர் கொண்ட கும்பல் பின் தொடர்ந்து வந்துள்ளது. தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பாம்பே ஸ்விட்ஸ் ஸ்டால் என்ற கடையில் சப்பாத்தி வாங்கி விட்டு பணம் கொடுக்க பர்சை எடுத்த போது நகை வியாபாரி மணி கையில் வைத்து இருந்த கருப்பு நிற பையை வெள்ளை சட்டை அணிந்து பின் தொடர்ந்து வந்த கும்பல் பறித்துக் கொண்டு தப்பிச்சென்றது.

பறித்துச் செல்லப்பட்ட பையில் 6 கிலோ 600 கிராம் எடையுள்ள தங்க நகைகளும் 14 லட்சம் ரூபாய் ரொக்க பணமும் இருந்துள்ளது

இது குறித்து தஞ்சை மேற்கு காவல்நிலையத்தில் நகை வியாபாரி மணி அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சீருடை கொள்ளையர்கள் 9 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தஞ்சையில் 2019ம் ஆண்டு நடந்த பெரியக் கோவில் கும்பாபிஷேகத்தின் போது மாநகரம் முழுவதும் காவல் துறை சார்பில் மக்கள் கூடும் இடங்கள், முக்கிய சாலை சந்திப்புகளில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பான்சர்’ பராமரிப்பில் இருந்த சிசிடிவி கேமராக்கள் தற்போது பராமரிப்பு இன்றி செயல்படாமல் உள்ளன.

இதன் காரணமாக தங்க நகை மொத்த வியாபாரி மணியிடம் இருந்து 6 கிலோ 600 கிராம் தங்க நகைகள், 14 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளை அடித்து சென்ற 9 பேர் கொண்ட சீறுடை கொள்ளையர்கள் எப்படி தப்பிச்சென்றார்கள் என்பதை கண்டு பிடிப்பதில் காவல்துறையினருக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. தற்போது தனியார் கடைகளில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி மட்டும் தான் போலீசுக்கு உதவியாக உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.