பான் – இந்தியா சினிமாவுக்கு அன்றே பாதை போட்ட தமிழ் படங்கள்

இந்திய சினிமா என்பது ஒருங்கிணைந்த சினிமாவாக இன்னும் மாறவில்லை. பல மொழி பேசும் மாநிலங்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியாவில் ஹிந்தி சினிமாதான் இந்திய சினிமா என்று உலக அளவில் பலரும் நினைத்திருந்தார்கள். இந்தியாவில் ஹிந்தி சினிமா மட்டுமில்லை மற்ற மொழி சினிமாக்களும் இருக்கிறது என பலரும் கடந்த பல வருடங்களாக உணர்த்தி வருகிறார்கள். ஆனாலும், பெரும்பாலானோருக்கு ஹிந்தி சினிமாவே பிரதானமாக இருந்தது. அந்த மாயத் தோற்றத்தை 'பாகுபலி' படம் வெகுவாக உடைத்தது.

ஆனால், 'பாகுபலி' படங்களும் அதற்குப் பிறகு சமீபத்தில் வெளிவந்த சில தெலுங்குப் படங்களும், ஒரே ஒரு கன்னடப் படமும்தான் இந்த பான்–இந்தியா வாசகத்தை அதிகம் பேச வைத்தன. அதே சமயம், அவற்றுக்கெல்லாம் முன்னோடியாக பல வருடங்களுக்கு முன்பே பான்–இந்தியா என்பதை உருவாக்கியது தமிழ் சினிமாதான். என்ன ஒன்று, அப்போது இந்த பான்–இந்தியா வார்த்தை என்பது புழக்கத்தில் இல்லை. இப்போது அந்த ஒரு வார்த்தையைக் கண்டுபிடித்துவிட்டு தெலுங்கு, கன்னட சினிமா உலகினர் தாங்கள்தான் புதிதாக சாதித்தது போல பேசி வருகிறார்கள்.

அந்தக்கால பிரம்மாண்டம்
தமிழ் சினிமா அந்தக் காலத்திலேயே மற்ற மொழிகளிலும் பிரபலமாக இருந்தது. இங்கு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் ஆகி வெளியாகி அங்கும் நல்ல வசூலைப் பெற்றன. அவற்றில் முதன்மையானது 1948ல் ஜெமினி ஸ்டுடியோஸ் எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில் வெளிவந்த சந்திரலேகா படம். அந்தக்கால தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு பிரம்மாண்டத்தை காட்டிய இந்த படம் இந்தியாவின் பல மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்றன என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதன்பிறகு எம்ஜிஆர், சிவாஜி கால கட்டங்களில் கூட பல தமிழ்ப் படங்கள் மற்ற மொழிகளுக்குச் சென்றிருக்கின்றன.

கமல்ஹாசன்
அதன்பிறகு 90களில் வெளியான பிரபு, குஷ்பு நடித்த 'சின்னத்தம்பி' படம் இந்தியாவில் பல மொழிகளில் பட்டையை கிளப்பியது. இன்று பான்-இந்தியா படங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், 40 ஆண்டுகளுக்கு முன்பே பான்-இந்தியா நடிகராக தன்னை இந்தியா முழுமைக்கும் கொண்டு சென்றவர் கமல்ஹாசன்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் நடித்தவர் கமல்ஹாசன். அவரது படங்கள் மற்ற மொழிகளில் என்னென்ன சாதனைகளைப் படைத்திருக்கிறது என்பதை இன்றைய சினிமா ரசிகர்கள் தேடிப் பார்க்க வேண்டும். கமல்ஹாசனின் 'அபூர்வ சகோதரர்கள்', 'குருதிப்புனல்', 'ஹேராம்', 'பஞ்சதந்திரம்', 'தசாவதாரம்' ஆகிய படங்கள் இன்றைய காலத்தில் வெளிவந்திருந்தால் 1000 கோடி வசூலை அட்டகாசமாக வசூலித்திருக்கும்.

ரஜினிக்கு முக்கிய பங்கு
பான்–இந்தியா என்ன, பான்–உலகத்திற்கே தென்னிந்திய சினிமாவைக் கொண்டு சென்றதில் முதன்மைப் பங்கு நடிகர் ரஜினிகாந்திற்கே. அவரது படங்கள்தான் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இந்திய சினிமாவிற்கே பான்–உலகத்தை அறிமுகம் செய்து வைத்தன. ரஜினியின் 'சிவாஜி' படம் போட்ட அந்த பான் உலகப் பாதைதான் இன்று தெலுங்கு, கன்னட, மலையாளப் படங்களும் நல்லதொரு வழிகாட்டியாக இருக்கின்றன.

தென்னிந்திய கலைஞர்கள்
நடிப்பைத் தாண்டி தென்னிந்திய சினிமாக்களுக்கான ஒரு அடையாளத்தை கடந்த 30 வருடங்களில் இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் ஆகியோர் அவரவர் படங்கள் மூலம் ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள். அவர்களும் போட்ட பாதையில் தான் இன்றைய தென்னிந்திய சினிமா தங்கு தடையில்லாமல் உலகம் முழுவதும் செல்ல முடிகிறது.

ஆக, தமிழ் சினிமாவின் இந்த ஜாம்பவான்களுக்குத்தான் ராஜமவுலிக்களும், பிரபாஸ், யஷ்களும் நன்றி சொல்ல வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.