பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள மருத்துவர் அன்புமணி இராமதாஸ் முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ், இபிஎஸ், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார்..
இந்நிலையில், இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து பெற்றார்.
விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் தெரிவித்ததாவது,
“தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றேன். எப்போதும் அவர்மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளது. அவரை சந்தித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
வருகின்ற 2026-ல் தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும். பாமக ஆட்சிக்கு வரவேண்டும். அப்போது அது தனிப்பட்ட ஆட்சியாக இருக்காது; கூட்டணிக் கட்சிகளின் ஆட்சியாகத்தான் அமையும். பாமகவை போல ஒருமித்த கருத்துள்ள கட்சிகளை நாங்கள் அணுகுவோம்” என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.
இந்த சந்திப்புக்குறித்து, தேமுதிக தரப்பில் இருந்து வந்துள்ள அறிக்கையில், “தேமுதிக தலைவர் விஜயகாந்த்தையும், கட்சியின் பொருளாளர் பிரேமலதாவையும் சாலிகிராமத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் இன்று பாமக கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆசி பெற்று சென்றார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.