Annamalai reply to ADMK ponnaiyan comment about BJP: தமிழகத்தில் பா.ஜ.க வளர்ச்சியடைவது அ.தி.மு.க.,வுக்கு ஆபத்து என்றும், பா.ஜ.க.,வின் இரட்டை நிலைப்பாட்டை அ.தி.மு.க ஐ.டி பிரிவு அம்பலப்படுத்த வேண்டும் என்றும் சி.பொன்னையன் கூறியுள்ள நிலையில், கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.,வின் அம்மா பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான 2 நாள் செயல்திறன் பயிற்சி ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமையகத்தில் நடைபெற்றது. இதில், மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கோகுல இந்திரா, வளர்மதி, முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், பேசிய முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க அமைப்புச் செயலாளருமான பொன்னையன், அ.தி.மு.க.,வின் கூட்டணி கட்சியாக பா.ஜ.க இருந்தாலும், அதன் வளர்ச்சி அ.தி.மு.க., தமிழகம் மற்றும் திராவிடக் கொள்கைகளுக்கு நல்லதல்ல” என்று கூறினார்.
தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது. காவிரி நதிநீர் மற்றும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனைகளில் பா.ஜ.க இரட்டை வேடம் போடுகிறது. கர்நாடக பா.ஜ.க., தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுப்பதற்கு எதிராக உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டாம். கர்நாடகாவுக்கு காவிரி நீரை வழங்க வேண்டும் என கூறுகிறது. ஆனால், தமிழ்நாடு பாஜக உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறக்க வேண்டும் என்கிறது.
அதிமுக பின்னுக்கு தள்ளப்படும் என்ற பிரச்சாரத்தை மறைமுகமாக பாஜக செய்து வருகிறது. நாம் அனைவரும் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் செயல்பட வேண்டும். காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு விவகாரங்களில் தமிழ்நாட்டின் நலனுக்காக பாஜக குரல் எழுப்புவது கிடையாது. மக்கள் மத்தியில் இதை நாம் அம்பலப்படுத்த வேண்டும். பாஜகவின் அணுகுமுறையை அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு சமூக ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்த வேண்டும். கட்சி உறுப்பினர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், என்று கூறினார்.
பின்னர், தமிழகத்துக்கு சாதகமாக கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பாஜகவுக்கு அறிவுரை வழங்கிய பொன்னையன், அப்போதுதான் அது இங்கே வளர முடியும்,” என்றும் கூறினார்.
இதையும் படியுங்கள்: ரீடிங் மாரத்தான்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் தொடங்கிய புதிய திட்டம்
பொன்னையனின் இந்த பேச்சு அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க.,வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம், இது குறித்து கேள்வி எழுப்பிய போது, யார் வேண்டுமானாலும் கருத்து சொல்ல உரிமை உண்டு. எல்லா தலைவர்களுக்கும் தங்களுடைய கட்சி தமிழகத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அது தவறில்லை. காவிரி, முல்லைப்பெரியாறு, ஹிந்தி உள்ளிட்ட விஷயங்களில், தமிழர்களுக்கு எது நல்லதோ, அதனையே பா.ஜ.க செய்து வருகிறது. எந்த தமிழக மக்களுக்கு விரோதமாக பா.ஜ.க செயல்பட்டதில்லை. காவிரி, முல்லைப்பெரியாறு விவகாரங்களில் தி.மு.க.,வும், காங்கிரஸூம் தான் இரட்டை நிலைப்பாடு எடுத்து வருகின்றன, என்று கூறினார்.