உண்ணும் உணவு பொருட்களிலிருந்து, மனிதன் அன்றாட பயன்படுத்தும் பொருட்களின் விலை வரை அனைத்தும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் காப்பீடு திட்டத்திற்கும் பிரிமியம் தொகையை உயர்த்தி உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
‘பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ மற்றும் ‘பிரதான் மந்திரி சுரக்க்ஷா பீமா யோஜனா’ ஆகிய இரண்டு காப்பீடு திட்டங்களை நரேந்திர மோடி முதன் முதலாக பிரதமராக பதவியேற்ற பின் கொண்டு வந்தார். இந்த இரண்டு காப்பீடு திட்டமும் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த காப்பீடு திட்டங்களில் பிரிமியம் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதன்படி பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தில் ஆண்டுக்கு 330 ரூபாய் வரை பிரிமியம் தொகையை இதுவரை மக்கள் செலுத்தி வந்த நிலையில், இந்த தொகை 436 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், பிரதான் மந்திரி சுரக்க்ஷா பீமா யோஜனா திட்டத்தில் தினசரி பிரிமியம் தொகையாக 12 ரூபாய் பெறப்பட்ட நிலையில் 20 ரூபாயாக உயர்த்தப்பட்டு, இன்று (2022 ஜூன் 1) முதல் இது அமலுக்கு வருகிறது. இந்த பாலிசிகளில் கடந்த ஆண்டுகளில் இழப்பீடு கோருவது அதிகரித்தத்தால் இந்த பிரீமியம் தொகை அதிகரிப்பை ஒன்றிய அரசு செய்துள்ளது.