அமைச்சர் பொன்முடி அண்மையில், “தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் புதிய கல்விக் கொள்கை என்பது நடைமுறைக்கு வரவேண்டிய அவசியமே இல்லை. அதை ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை என்பதை முதலமைச்சர் தெளிவாக வலியுறுத்தியிருக்கிறார்” என்று திட்டவட்டமாக கூறினார்.
இந்தநிலையில், இன்று மற்றும் நாளை குஜராத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மாநாடு நடைபெறவிக்கிறது. இதைத்தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையிலான மாநாட்டிற்கு அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த மாநாட்டில், கல்வி அமைச்சர்களுக்கு கலந்து கொள்ள அழைப்பு வந்த போதும், தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் ஆகியோர் புறக்கணித்துள்ளனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணையமைச்சர் சுபாஷ் சர்கார், அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
மேலும் கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வரும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.