கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல், உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இதற்கிடையே புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே, பொருளாதார நெருக்கடி பிரச்சினைகளுக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வரி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. வரி உயர்வுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதையடுத்து அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி மதிப்பு கூட்டு வரி (வாட்) 8 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், தொலைத் தொடர்பு வரி 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
பெரு நிறுவன வரி 24 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட வரி செலுத்துவோருக்கு விலக்குகள் குறைக்கப்பட்டு இருக்கிறது. தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு ஆண்டுக்கு 30 லட்சத்தில் இருந்து 18 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2019-ம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கையில் குறைந்த வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டு வரி சலுகைகள் அறிவித்ததையடுத்து ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் வரி வருவாயில் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
2020-21-ம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதால், வரி சீர்திருத்தங்கள் அரசாங்க வருவாயில் குறிப்பிடத்தக்க இழப்புக்கு வழி வகுத்த கொள்கைகளாக கருதப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கான வருவாய் 2021-ம் ஆண்டில் 8.7 சதவீதமாக குறைந்து மோசமடைந்துள்ளது.
இந்த நிதி ஏற்றத்தாழ்வு பொருளாதாரத்தின் மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே வருவாயை மேம்படுத்துதல், நாட்டின் நடுத்தர மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சி நோக்கங்களை நிறைவேற்றுவதில் வரி உயர்வை செயல்படுத்துவது அவசியம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.