அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் கடந்த மாதம் 25ஆம் தேதி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இதில் சிக்கி 19 குழந்தைகள் குழந்தைகள், இரண்டு ஆசிரியர்கள் என மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தக் கொடூரச் செயலை செய்த 18 வயதான இளைஞர் சால்வடர் ராமோஸ் என்பவர், பாதுகாப்பு படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில் உள்ள சாண்டா ஃபே உயர்நிலைப் பள்ளியில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிக்கி 10 பேர் உயிரிழந்த நிலையில், தற்போதைய டெக்சாஸ் சம்பவம் பெரும் சோகத்தையும் கடும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி விட்டதாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. எப்போது தான் நாம் அனைவருமே துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக ஒருமித்த குரல் கொடுக்கப்போகிறோம் என்று கேள்வி எழுப்பிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நேரம் வந்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ள நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா அர்டர்னிடம், அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுக்குள் கொண்டு வருவது பற்றி அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவுரை கேட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச் சம்பவத்தை சுட்டிக்காட்டி, துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ‘எங்களுக்கு உங்களது வழிகாட்டுதல் வேண்டும்’ என ஜோ பைடன் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘3 ஆண்டுகள் மட்டுமே புடின் உயிருடன் இருப்பார்’ – உளவுத்துறை ஷாக்!
நியூசிலாந்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிக்கி 51 பேர் பலியாகினர். இதையடுத்து, நாடு முழுவதும் ராணுவ பாணியில் நடவடிக்கை எடுத்து துப்பாக்கிகளை தடை செய்ய ஜெசிண்டா அர்டர்ன் நிர்வாகத்துக்கு இந்த துயர சம்பவம் வழிவகுத்த நிலையில், அவரிடம் ஜோ பைடன் அறிவுரை கேட்டுள்ளார்.
ஜெசிண்டா அர்டர்னுடன் பேசுகையில், “உலகளாவிய பிரச்சினையில் உங்கள் தலைமை ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. இது உண்மையில் காலநிலை மாற்றம், வன்முறை, தீவிரவாதம் மற்றும் கிறிஸ்ட்சர்ச்சில் நடந்தது போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சியை ஊக்கப்படுத்துகிறது. எங்களுக்கு உங்கள் வழிகாட்டுதல் தேவை.” என்று ஜோ பைடன் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.