புதுடெல்லி: ‘தமிழக அரசின் ஒப்புதலோடு வந்தால் மட்டுமே மக்கள் நலப்பணியாளர் தொடர்பான வழக்கு கோடைக்கால அமர்வில் விசாரிக்கப்படும்,’ என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மக்கள் நலப் பணியாளர்கள் தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தமிழகத்தில் சுமார் 12,524 கிராம பஞ்சாயத்துகளில் மக்கள் நலபணியாளர்கள் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். குறிப்பாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.7500 ஊதியம் வரும் வகையில் வேலை உறுதித் திட்டப் பணி கண்டிப்பாக வழங்கப்படும். இதில் முக்கியமாக பணி நீக்கம் செய்யப்பட்ட அல்லது கடந்த பத்து ஆண்டுகளில் இறந்துபோன மக்கள் நலப்பணியாளர்களின் சட்டப்படியான வாரிசுகளுக்கும் மீண்டும் பணி வழங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மக்கள் நலப்பணியாளர் விழுப்புரம் தன்ராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரகுநாத சேதுபதி உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில், ‘மக்கள் நலப்பணியாளர் தொடர்பான மனுவை அவசர வழக்காக கோடைக்கால அமர்வில் பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும். மேலும் மாத ஊதியம் ரூ.7500 வழங்குவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட முன்மொழிவை, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரையில் அரசாணையாக பிறப்பிக்க தடை விதிக்க வேண்டும்’ என தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி, ‘இந்த விவகாரத்தில் தமிழக அரசின் ஒப்புதலோடு வந்தால் மட்டுமே மனுவை கோடைக்கால சிறப்பு அமர்வில் பட்டியலிட்டு விசாரிக்க முடியும். இல்லை என்றால் வழக்கமான முறையில் தான் நீதிமன்றம் விசாரிக்கும்,’ என உத்தரவிட்டனர்.
