புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களையும், அப்பாவி மக்களையும் தீவிரவாதிகள் கொலை செய்து வரும் நிலையில், பாஜ தனது எட்டு ஆண்டு நிறைவை கொண்டாடுவதா? என ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் வெளியிட்டுள்ள பதிவில், ‘காஷ்மீரில் கடந்த ஐந்து மாதங்களில் 15 பாதுகாப்பு படையினர் வீர மரணம் அடைந்துள்ளனர். மேலும், 18 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக, தற்போது கூட ஒரு ஆசிரியை தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பொருத்தமட்டில் காஷ்மீர் பண்டிட்டுகள் கடந்த 18 நாட்களாக தங்களின் உயிருக்கு அடைக்கலம் கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் பாஜ தங்களின் ஆட்சி காலம் 8 ஆண்டுகள் முடிவதை கொண்டாடுவதில் மும்முரம் காட்டி வருகிறது. இதனை எந்த விதத்தில் ஏற்க முடியும்? மேலும், ஜம்மு காஷ்மீரில் நிகழ்வது படம் அல்ல எனவும் காஷ்மீரில் தற்போது நிலவி வரும் எதார்த்த உண்மையை தான் குறிப்பிடுகிறேன் என தெரிவித்துள்ளார்.