மாநிலங்களவை தேர்தல்: 22 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பா.ஜ.க.

புதுடெல்லி,

பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் மாநிலங்களவை தேர்தலுக்கான 22 வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டது. 2 சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கவும் இக்கட்சி முடிவு செய்துள்ளது.

மாநிலங்களவையில் காலியாகும் 57 உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வின் 18 பேர் பட்டியல் கடந்த 29-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் இருந்தும், வர்த்தக மந்திரி பியூஷ் கோயல் மராட்டியத்தில் இருந்தும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மொத்தம் 22 பேர் பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டது.

அத்துடன், ராஜஸ்தானை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் சுபாஷ் சந்திராவுக்கும், அரியானா சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மாவும் ஆதரவு அளிப்பதாக பா.ஜனதா அறிவித்துள்ளது. கார்த்தியேக சர்மாவுக்கு ஆதரவு அளிப்பதாக பா.ஜ.க. கூட்டணிக் கட்சியான ஜனநாயக ஜனதா கட்சியும் அறிவித்துள்ளது.

22 வேட்பாளர்களில் உத்தரபிரதேசத்தில் இருந்து 8 பேரும், மராட்டியம், கர்நாடகத்தில் இருந்து தலா 3 பேரும், பீகார், மத்தியபிரதேசத்தில் இருந்து தலா 2 பேரும், ராஜஸ்தான், உத்தரகாண்ட், ஜார்கண்ட் மற்றும் அரியானாவில் இருந்து தலா ஒருவரும் போட்டியிடுகின்றனர்.

பா.ஜ.க. மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலில் தற்போதைய மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, மூத்த தலைவர்கள் வினய் சகஸ்ரபுத்தே, ஓ.பி.மாத்தூர் போன்றோர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க.வுக்கு முஸ்லிம் எம்.பி. இல்லாத நிலை?

ஆளும் பா.ஜ.க.வுக்கு மக்களவையில் முஸ்லிம் உறுப்பினர் இல்லாத நிலையில், மாநிலங்களவையில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்களான முக்தார் அப்பாஸ் நக்வி, சையத் ஜாபர் இஸ்லாம், எம்.ஜே.அக்பர் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பா.ஜ.க. சார்பில் முஸ்லிம் உறுப்பினர் இல்லாத நிலை ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது.

அதேநேரம் உத்தரபிரதேசத்தின் ராம்பூர் மக்களவை தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் நக்விக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. வருகிற ஜூலை 7-ந் தேதி நக்வியின் உறுப்பினர் பதவி முடிவடையும்நிலையில், அவர் அதன் பின் 6 மாதங்களில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் தனது மந்திரி பதவியை இழக்கும் நிலை ஏற்படலாம்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.