முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (01) மாலை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் துமிந்த சில்வாவை சிறைச்சாலை காவலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உச்ச நீதிமன்றம் இன்று (01) இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், அதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் உதவிகளை வழங்குமாறு சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன் துமிந்த சில்வாவின் கடவுச்சீட்டை முடக்கி வெளிநாட்டுக்கு செல்வதற்கான இடைக்கால தடையையும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
அத்துடன் உச்ச நீதிமன்றம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பை இடைநிறுத்தி, வரலாற்று சிறப்புமிக்க இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் சட்டபூர்வ தன்மையை ஆராய்வதற்காக உயர்நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர் யசந்த கோதாகொட மற்றும் நீதியரசர் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் ‘மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்’ தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் இந்த மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் மீது இறுதித் தீர்ப்பு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.
அரசியலமைப்பின் 12(1) பிரிவின்படி மூன்று அடிப்படை உரிமை மனுக்களை தொடர உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், இந்த மனுக்களை எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி விசாரனைக்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானித்துள்ளது.
இந்த மனுக்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது தாயார் சுமனா பிரேமச்சந்திர மற்றும் இலங்கை மனித உரிமைகள் குழுவின் முன்னாள் ஆணையாளர் கசாலி ஹுசைன் ஆகியோர், துமிந்த சில்வாவின் பொது மன்னிப்பு ஜனாதிபதி மன்னிப்பு சட்டத்தில் செல்லாது என அறிவிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதாக 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 அன்றைய தினம் ஊடகங்களில் பரவலாக வெளியிடப்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளதுடன் குற்றம் சாட்டப்பட்ட மற்ற குற்றவாளிகள் இந்த வழக்கில் இதுவரை தண்டனை அனுபவித்து வருகின்றனர் எனவும் சுட்டி காட்டியிருந்தனர். மேலும், 34 வது பிரிவின்படி மன்னிப்புக்கான நடைமுறையை அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசியலமைப்பின் 34 (1) வது பிரிவில் குறிப்பிட்டுள்ளபடி அத்தகைய மன்னிப்பை வழங்க வேண்டியதன் அவசியத்தை கவனமாக ஆய்வு செய்த பின்னரே அரசியலமைப்பின் 34 வது பிரிவின் கீழ் வழங்கப்படும் எந்தவொரு மன்னிப்பும் ஏற்றுக்கொள்ள முடியும் என மனுதாரர்கள் வாதிட்டனர்.
2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை படுகொலை செய்த குற்றத்திற்காக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட மற்ற குற்றவாளிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது. இத்தீர்ப்பு முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான உச்ச நீதிமன்ற ஐவர் அடங்கிய குழுவினால் வழங்கப்பட்டது.
ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் கசாலி ஹுசைன் சார்பாக எம்.ஏ.சுமந்திரன் பி.சி., ஜெப்ரி அழகரட்ணம் வாதாடியதுடன் பி.சி. சுமண பிரேமச்சந்திரவுக்காக சட்டத்தரணி திமுத்து குருப்பு ஆராச்சியின் அறிவுறுத்தலின் பேரில் தமிந்த விஜேரத்ன மற்றும் சுந்தரமூர்த்தி ஜனகன் ஆகியோருடன் சட்டத்தரணி எராஜ் டி சில்வா ஆஜராகினர்.