சென்னை: மருத்துவக் காரணங்களுக்காக கணவர் முருகனுக்கு 6 நாட்கள் பரோல் வழங்கக் கோரி அவரது மனைவி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் எனக்கு தமிழக அரசு பரோல் வழங்கியதால் தாய் பத்மாவுடன் தங்கியிருக்கிறேன். ஆனால், வேலூர் சிறையில் இருக்கும் எனது கணவர் முருகனுக்கு பரோல் வழங்கப்படவில்லை. 31 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் எங்களை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்படி எங்களை இன்னும் விடுதலை செய்யவில்லை .
எனவே, மருத்துவக் காரணங்களுக்காக கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கக் கோரி கடந்த மே 26-ம் தேதி நானும், மே 21-ம் தேதி எனது தாய் பத்மாவும் தமிழக அரசிடம் மனு அளித்தோம்.
அந்த மனுக்கள் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.எனவே, எனது கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.