முல்லை பெரியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தண்ணீர் திறந்தார்..

தேனி: முல்லை பெரியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தண்ணீர் திறந்தார். இந்த தண்ணீரை விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர்.

முல்லை பெரியாறு அணையிலிருந்து ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீரை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். முதல்போக சாகுபடிக்கு வினாடிக்கு 200 கனஅடி, குடிநீர் தேவைக்காக 100 கனஅடி என இன்று முதல் 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் திறப்பால் பேரணை முதல் கள்ளந்தரி வரை 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டது.

முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை கொண்டு தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் இருபோக நெல்சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. முதல்போக சாகுபடிக்காக அணையில் இருந்து நீர் இருப்பை பொறுத்து வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் 132 அடியை கடந்து இருப்பதாலும், தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்பதாலும் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்று இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி முல்லைபெரியாறு அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்காக விநாடிக்கு 200 கனஅடி வீதமும், தேனி மாவட்ட குடிநீருக்காக 100 கனஅடியும் சேர்த்து 300 கனஅடி திறக்க உத்தரவிட்டது. 120 நாட்களுக்கு நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்துவிட அரசு அறிவுறுத்தியது. அதன்படி இன்று முல்லைபெரியாறு அணை பகுதியில் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு அருகில் உள்ள வனதுர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதில் அமைச்சர் இ.பெரியசாமி, கலெக்டர் முரளிதரன், எம்.எல்.ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுப்பணித்துறையினர், விவசாய சங்கபிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதன்பின் அணையின் ஷட்டர் அமைந்துள்ள பகுதிக்கு சென்று நீர்திறப்புக்கான பொத்தானை அழுத்தி அமைச்சர் இ.பெரியசாமி தண்ணீர் திறந்துவிட்டார். அப்போது ஷட்டர்கள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. அதில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர்தூவி வழிபட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.