புது டெல்லி: தமிழகத்தின் கோயில்களில் இருந்து களவு போன 10 சிலைகள், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளின் அருங்காட்சியகங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள், தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தலைநகர் டெல்லியில் இந்த சிலைகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய இணையமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், மீனாட்சி லேகி மற்றும் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர். மொத்தம் 10 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. அதில் 8 சிலைகள் உலோகங்களால் ஆனது. 2 சிலைகள் கற்களால் உருவானவை.
மீட்கப்பட்ட சிலைகளின் விவரம்: தென்காசி மாவட்டத்தில் களவு போன துவாரபாலகர் சிலைகள் (2 – கற்சிலைகள்), தஞ்சை புன்னை நல்லூரில் களவு போன நடராஜர் சிலை, நெல்லை ஆழ்வார்குறிச்சி கங்காளமூர்த்தி சிலை, ஆழ்வார்குறிச்சி நந்திகேஸ்வரர் சிலை, அரியலூர் விஷ்ணு சிலை, அரியலூர் ஸ்ரீதேவி சிலை, தஞ்சை தீபாம்பாள்புரம் சிவன் – பார்வதி சிலை, நாகை குழந்தை சம்பந்தர் சிலை, நடனமாடும் குழந்தை சம்பந்தர் சிலை தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. மே, 2021-ஆம் ஆண்டுக்கு முன் 2 சிலைகளும், அதன் பிறகு 8 சிலைகளும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சிலைகள் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. அதன் பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிலைகள் சம்பந்தப்பட்ட கோயில்களில் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.