லைவ் அப்டேட்ஸ்: ரஷியாவில் இருந்து உரங்கள், தானியங்கள் ஏற்றுமதிக்கு அமெரிக்கா ஆதரவு

01.06.2022

04.50: உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்குவது குறித்து, அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின், உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் உடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார். உக்ரைன் பாதுகாப்பை பலப்படுத்துதல், போரிடுவதற்கு ஆயுத விநியோகம் குறித்து விவாதம் நடைபெற்றதாக ரெஸ்னிகோவ் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு 40 பில்லியன் டாலர் உதவி வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
03.40: ரஷியாவில் இருந்து உரங்கள் மற்றும் தானியங்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை ஆதரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.  ஐ.நா.சபை தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஐநாவிற்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ், உக்ரைனில் நடைபெறும் போரினால் உலகளாவிய உணவுப் பாதுகாப்பின்மை பெரிய அளவில் அச்சுறுத்தலாக உள்ளது என்றார். இதை நிவர்த்தி செய்ய ரஷியாவில் இருந்து தானியங்கள் மற்றும் உரங்களை ஏற்றுமதி செய்வதை பைடன் அரசு ஆதரிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
02.30: உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியா மீது புதிய பொருளாதார தடை விதிக்கும் நடவடிக்கையாக அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்குக்கு  மேல் தடை விதிக்கும் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம்  ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவில் இருந்து 90 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவது குறையும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்  தெரிவித்துள்ளார்.
12.20:  ரஷிய படைகள் செவெரோடோனெட்ஸ் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிப்பதாகவும், தங்கள் படையினர் பதிலடி கொடுத்து வருவதாகவும் உக்ரேனிய ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். ரஷிய படைகளின் தாக்குதலால் அந்த நகரத்தில் 90 சதவீத வீடுகள் சேதமடைந்துள்ளன, முக்கியமான உள்கட்டமைப்பு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த போரில் மக்களின் உயிரைப் பணயம் வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
31.5.2022
20.45: அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக ரஷியாவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயை வாங்க பல நாடுகள் அஞ்சி வருகின்றன. இதற்கிடையே, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணையைப் பெற்று வருகின்றன. இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் பார்வை இந்தியா மற்றும் சீனா பக்கம் திரும்ப வாய்ப்புள்ளது.
17.00: உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் போர் 3 மாதத்தைக் கடந்துள்ளது. பல இடங்களில் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது ரஷிய படைகள் ஈவிரக்கமின்றி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது. இதற்கிடையே, போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக 2 ரஷிய ராணுவ வீரர்கள் மீது உக்ரைன் குற்றம் சுமத்தி வழக்கு விசாரணை நடத்தியது. இந்நிலையில், இருவருக்கும் தலா 11 1/2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உக்ரைன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
14.33:  ரஷியாவின் கேஸ்ப்ரோம் நிறுவனம் நெதர்லாந்திற்கு எரிவாயு விநியோகிப்பதை நிறுத்தியதாக அறிவித்துள்ளது.
10.35: உக்ரைனுக்கு எதிரான போரை கண்டிக்கும் விதமாக ரஷியா மீது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இருப்பினும் அதில் சில நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில் கச்சா எண்ணெய் கொள்முதலை இந்த ஆண்டு இறுதிக்குள் 90% நிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
04.10: உக்ரைனின் மெலிடோபோல் நகரில் கார் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.  அந்த நகரம் தற்போது ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. ரஷிய படைகளை எதிர்ப்போர் இந்த சதி வேலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. மெலிடோபோல் நகரை,  நிர்வாகம் செய்ய ரஷியாவால் நியமிக்கப்பட்ட அதிகாரி தங்கியிருந்த கட்டிடத்திற்கு அருகே இந்த கார் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாக மேயர் இவான் ஃபெடோரோவ் தெரிவித்துள்ளார்.
02.50: ரஷியா, உக்ரைன் இடையேயான போர் முடிவுக்கு வர உதவுவதற்கு தயாராக இருப்பதாக துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ரஷிய அதிபர் புதின் உடனான உரையாடலின் தெரிவித்துள்ளார். இதற்காக இஸ்தான்புல் நகரில் ரஷியா, உக்ரைன் மற்றும் ஐ.நா.சபை அதிகாரிகளை சந்தித்து பேசவும் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
01.40: உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் உக்ரைன் ராணுவ நிலைகளை ரஷியப் படையினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற பிரான்ஸ் ஊடகவியலாளர் ஒருவர் ரஷியா நடத்திய பீரங்கித் தாக்குதலுக்கு பலியானதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
12.30: ரஷியாவை நேரடியாக தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்காது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன்
தெரிவித்துள்ளார். பைடன் அரசு ரஷியாவிற்கு எதிராக போரிடுவதற்கு உக்ரைன் நாட்டிற்கு மேம்படுத்தப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை அனுப்பத் தயாராகி வருகிறது என்ற செய்திகள் வெளியான நிலையில் பைடன் இதை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.